ADDED : ஆக 29, 2017 11:07 PM

நாகர்கோவில்: சாரல் மழையால், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையில், உப்புத்தன்மையை உறிஞ்சுவதற்காக பூசப்பட்டிருந்த காகிதக்கூழ் கரைந்தது.
கன்னியாகுமரியில், கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, உப்புக்காற்றால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசப்படுகிறது.
நான்காவது முறையாக இப்பணி, ஏப்., 17-ல் துவங்கி, நான்கு மாதங்களாக நடந்து வருகிறது. முதலில் இணைப்புகளில் உள்ள உப்புத்தன்மை மாற்றப்பட்டு, புதிய சிமென்ட் கலவை பூசப்பட்டது. அதன் பின், சிலை முழுவதும் படிந்துள்ள உப்பை உறிஞ்ச காகிதக்கூழ் பூசப்பட்டது. இது, நன்கு உலர்ந்து வரும் போது, சிலையில் உள்ள உப்புத்தன்மையை முழுவதுமாக உறிஞ்சி விடும். ஆனால் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் இந்த மழை சற்று பலமாக பெய்தது. இதனால் சிலையின் ஒரு பகுதியில் இருந்த காகிதக்கூழ் தண்ணீரில் கரைந்து விட்டதால், காகிதக்கூழ் பூசுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இனி வெயில் அடித்த பின், புதிதாக காகிதகூழ் பூசப்படும். அக்., 15ம் தேதிக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.