மலை கிராமங்களில் கற்கால வாழ்க்கை: மலைவாழ் மக்கள் அவதி
மலை கிராமங்களில் கற்கால வாழ்க்கை: மலைவாழ் மக்கள் அவதி
ADDED : மார் 15, 2011 09:12 PM

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி தொகுதியில் இடம் பெற்றிருந்த, வாழப்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களும், தற்போது ஏற்காடு (தனி) தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
வாழப்பாடி தாலுகா, அயோத்தியாப்பட்டணம் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட, பெலாப்பாடி, வாலூத்து, தாழூர் ஆகிய மூன்று கிராமங்களும், மற்ற கிராமங்களில் இருந்து விலகி, நான்கு புறமும் மலைக் குன்றுகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ளன.
இந்த மூன்று கிராமங்களிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். வாழப்பாடி பஞ்சாயத்து யூனியனில், தேக்கல்பட்டி கிராம பஞ்சாயத்து ஜம்பூத்துமலை உச்சியிலுள்ள ஜம்பூத்து கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். ஆத்தூர் தாலுகாவிலிருந்து, ஏற்காடு தொகுதியில் இடம்பெற்றுள்ள பெத்தநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து யூனியன், இடையப்பட்டி கிராம பஞ்சாயத்து நெய்யமலையில், நெய்யமலை, அக்கரைப்பட்டி, ஆலாங்கடை ஆகிய மூன்று மலை கிராமங்கள் உள்ளன.
இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அந்த மலைகிராம மக்களுக்கு, சாலை, போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதி கிடைக்காததால், நோய்வாய்ப்படும் முதியோர்களையும், பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணி பெண்களையும், கரடுமுரடான மலைப்பாதையில், 'தூரி' கட்டி தூக்கிவரும் அவலம் இன்றளவிலும் நீடித்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கும் வழியில்லாததால், வனப்பகுதியிலுள்ள சுனை, நீரோடை, நீர்பாலி போன்றவற்றில் தேங்கி கிடக்கும் அல்லது திறந்தவெளி கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வடிகட்டி குடிநீராக உபயோகப்படுத்துகின்றனர். மேற்கண்ட மலை கிராமங்களுக்கு, இதுவரை மின்சார வசதி கிடைக்கவில்லை. எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசியல் கட்சியாவது நடவடிக்கை எடுக்குமா என காத்திருக்கின்றனர்.
: நமது சிறப்பு நிருபர் :