தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்


ADDED : ஜன 14, 2019 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2019 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்த செயலையும் ஆண்டவனை வணங்கி நல்ல நாள் பார்த்து, நட்சத்திரம், நேரம் குறித்து அதன்படியே, அந்த நாள், அந்த நேரம், அந்த செயலை ஆரம்பித்தால் வெற்றி கிட்டும் என்ற மிகப் பெரிய நம்பிக்கையை உடையவர்கள் நம் மக்கள். அதன்படி, ஆண்டின், 12 மாதங்களில், தை மாதம், நல்ல செயலை ஆரம்பித்தால், அது நல்ல பயனை நமக்கு அளிக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டுள்ளோம்.

வருடா வருடம் மாதந்தோறும் பண்டிகை என்ற பெயரில் நிறைய விசேஷங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஆயினும் இவற்றில் எல்லாம் முதன்மை பெறும் ஒரு சிறப்பு மிக்க மகிழ்ச்சியான பண்டிகை, உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை தான்.கதிரவன் தனது வெப்ப சேவையில் உச்சத்தைப் பெறும் முதல் ஆறு மாதங்கள், 'உத்தராயணம்' என்றும், சாந்தத்தைப் பெறும் அடுத்த ஆறு மாதங்கள், 'தட்சிணாயணம்' என்றும் அழைக்கப்படுகின்றன.

உத்தராயணத்தில் கதிரவனின் பார்வை, உக்கிரம் வடக்கு நோக்கியும், தட்சிணாயணத்தில் தெற்கு நோக்கியும் இருக்கும் என்றும் கோளியல் அறிஞர்கள் சொல்வதுண்டு. அத்தகைய உத்தராயணம் தொடங்கும் நாளும் தட்சிணாயணம் முடியும் நாளும், பொங்கல் பண்டிகையே ஆகும்ஆறு மாதங்களாய் நிலவி வந்த நீண்ட இரவுகளுக்கு பிறகு வரும் கடவுள்களின் தினம் தை முதல்நாள். இது, நமக்கு உணவளிக்கும் உழவர்களுக்கும் அதற்கு ரணமான சூரியனுக்கும் நாம் செய்யும் மரியாதையும், நன்றி நவிலலும்தான்.

அதனாலேயே இந்த நாளை தேசிய பொங்கல் தினம் என்று கூறுகின்றனர். உழவர் திருநாளாம் தைத்திருநாள், உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களாலும் கொண்டாடப்பட்டுகிறது.பொங்கல் விழா, மக்களால் இயற்கை முறையில் இயல்பாகக் கொண்டாடப்படும் ஒரு உண்மையான விழா; உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.

நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் நாளை மலர்கிறது. இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளாண்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர். இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுகின்றனர். உழவர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல், உழைத்துச் சேர்த்த நெல்லை, மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து, சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தனர். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பர்.நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.

இதுவே, நாளடைவில் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது என்ற வரலாற்று கதை, அனைவர் மத்தியிலும் பிரபலமாக நினைவூட்டப்பட்டு வருகிறது.

போகி - பழையன களைதல்

போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், 'பழையன கழித்து புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து, வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகி பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். போகி பண்டிகை இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாககருதப்படுகிறது. அன்று வீட்டின் கூரையில், பூலாப்பூ என்கிற மலரை சொருகி வைப்பர். போன ஆண்டு போல், 'டிவி' முன்பும், வாட்ஸ் ஆப், முகநுால் என்றும் இருந்த நம் நேரத்தை இந்த முறை களைந்து கழித்துவிட்டு, புத்தம் புதிதாய் அனைவருக்கும் போனில் வாழ்த்துவோம்.

அருகில் உள்ளவர்களுக்கு நேரில் சென்று வாழ்த்துவோம். உறவுகளை மேம்படுத்தி, உயிரற்ற பொருட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தீயிட்டு கொளுத்தி விடுவோம்.அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால், நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள். அதனால் இன்று மகிழ்வோடு போளி, வடை, பாயசம் சமைத்து சாமிக்கு என்று நெய்வேத்யம் செய்து சாப்பிடுவோம்

தைப்பொங்கல் - புதியன புகுதல்

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே, தை மாதம் ஆகும்.பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானுக்கு பூஜை செய்து வழிபட்டால் பல நன்மைகள் ஏற்படும். இந்த நன்னாளில் நல்லநேரம் பார்த்து, அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்து பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும், மாட்டுக்கும் படைக்க வேண்டும்.

பிறகு வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்கும்போது, 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும்.

பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல், நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த்தேக்கத்தால் ஒரு வேளாண்மை தான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி அல்லது தை மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும்.

செந்நெல் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து, பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்துக் கொள்ள இயலும்

பஞ்ச பூதங்களும் பொங்கலும்:

பொங்கல் திருவிழாவை பஞ்சபூத வழிபாட்டுக்குரிய நாளாக கொள்ளலாம். நிலம்,நீர்,நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் தற்போதுவரை கிராமங்களில் மண்பானையிலேயே பொங்கலிடுகின்றனர்.இந்தப் பானை முதலில் பூமியிலிருந்து களிமண்ணால் செய்யப்படுகிறது. பானையில் நீர்விட்டு பனை ஓலை மூலம் நெருப்பு வைத்து அரிசியைக்கொதிக்க வைக்கிறோம்.நெருப்பு எரிவதற்கு காரணமாக் காற்று இருக்கிறது.வெட்ட வெளியில் பொங்கல் வைப்பதன் மூலம் ஆகாயத்தை பார்க்கிறோம். பொங்கல் வைக்கும் புகையும் வளிமண்டலத்துக்கு நன்மையை செய்கிறது இதன்படி பஞ்ச பூதங்களை வழிபடும் பண்டிகையாய் பொங்கல் அமைந்துள்ளது

தேசிய விழாவாய் நம் பொங்கல் விழா

பொங்கல் விழாவை தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிர்ப்பதும் வழக்கமாய் உள்ளது.

தைப்பொங்கலுக்குச் சில நாள்களுக்கு முன்னரே தயாராகுதல் தொடங்கும். பொங்கலுக்குத் தேவையான பொருள்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானைகளை பலர் வாங்குவர்.

பொங்கல் பண்டிகை என்பது நமது மரபில் பண்பாட்டு அடையாளமாக, வாழ்க்கைமுறையில் ஆழ வேரூன்றிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. நாம் நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளமாக பொங்கல் கொண்டாட்டங்கள் அமைகின்றன. நம்முடைய வாழ்வில் உழவுத்தொழில் சிறந்து விளங்குகிறது, அதைச் சார்ந்த மற்ற தொழில்களும் சிறந்து விளங்குகின்றன, நமது குடும்பங்களில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட ஆநிரைச் செல்வங்கள் நிறைந்திருக்கிறன என்பதையெல்லாம் பறைசாற்றும் திருவிழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழக அரசுகள் செய்த மாற்றங்கள்

2006-2011 வரையிருந்த தமிழக அரசு, தை 1 தமிழாண்டின் முதல் நாளானபடியால், அதுவே தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு என சனவரி 29, 2008 அன்று அறிவித்தது.சூரியன் அன்று மகர ராசியில் நகர்கிறது என்றும் ஒரு மகரராசிப் பிரவேசத்திற்கும் அடுத்த மகர ராசிப் பிரவேசத்திற்கும் உள்ள இடைப்பட்ட காலமே ஒரு திருவள்ளுவர் ஆண்டு என்றும் கூறப்பட்டது

இன்றைய நாள் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழமையாதலால், அந்நாளை புதுநாள் எனவும் கூறுவர். அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவைச் சேர்ந்த மக்களும் தையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினர்.

2006-2011 வரையிருந்த தமிழக அரசின் இந்த அறிவிப்பு சில பிரிவினரிடையே அதிருப்தியை உருவாக்கியது.தமிழக அரசுக்கு தமிழகப் பாரம்பரிய விஷயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆகஸ்டு 23, 2011ல் தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.]அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொங்கலைப் போன்ற பிற விழாக்கள்

வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும் தமிழ்மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையைக்கொண்டாடினர் தமி]ழர் திருநாளாகிய பொங்கலை மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தியாக கொண்டாடுகிறார்கள். அதே சமயம் அறுவடை திருநாள் எனவும் இவ்விழா அழைக்கப்படுகிறது.

குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இப்பண்டிகை உத்தராயன் என்கிற பெயரிலும், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் லோரி என்றும் கொண்டாடப்படுகிறது.இந்தியாவிற்கு அப்பாலும் பொங்கல் பண்டிகை களைகட்டுகிறது. இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம், மியான்மர், லாவோஸ் போன்ற நாடுகளிலும் வேறு பெயர்களில் இப்பண்டிகை அழைக்கப்படுகிறது.

நேபாளத்தில் மாகி, மாகே சங்கராந்தி, மாகே சகாராதி என்கிற பெயர்களில் பொங்கல் போற்றப்படுகிறது. தாய்லாந்தில் சொங்க்ரான் எனவும், லாவோஸ் மக்களால் பி மா லாவ் என்றும், மியான்மரில் திங்க்யான் என்கிற பெயரிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளை தமிழ் புத்தாண்டாக பாவிக்கிறார்கள் இலங்கை இன மக்கள்.

கோலங்கள்

தைப்பிறந்தால் பொங்கல் வரும். ஆனால் மார்கழித் திங்களிலேயே நம் கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிடுவோம். அதன் முதல் கொண்டாட்டம் தினமும் காலையில் மிக அழகாய் கோலம் போட்டு வண்ணங்கள் பூசி நம் வீட்டு வாசலை அழகுப்படுத்துவது. கோலம் போடுவது என்பது ஒரு கலை. அதையும் தாண்டிய அறிவியல் சம்பந்தப்பட்டது இப்படி புலர் காலையில் புள்ளி வைத்து கோலம் இடுவது.கோலங்கள் அரிசிமாவு, முருகைக் கற்பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன.

பொதுவாக வெளியே தளர்வான மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து,

ஏற்கனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள். பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவதாயின், சிலவேளைகளில் அரிசியை நீர்விட்டுப் பசைபோல் அரைத்துப் பின்னர் வேண்டிய அளவு நீர் விட்டுக் கரைத்து, அதை ஒரு துணியில் தோய்த்துக்கொண்டு விரல்களுக்கிடையே மெதுவாக வைத்து அழுத்த விரல்களில் வடியும் மாக்கரைசலினால் பேனாவால் வரைவதுபோல் கோலம் வரையலாம். காய்ந்த பின்னர் இது நீண்ட நேரத்துக்கு அழியாமல் இருக்கும்.

கரும்பு:

பொங்கல் என்றால் இனிப்பு பொங்கலுக்கு பிறகு ஞாபகம் வருவது இனிப்பான கரும்புதான்.பொங்கல் சாப்பிட விரும்பாத பலருக்கும் கரும்பென்றால் இனிக்கும்..இது பொங்கல் பண்டிகையின் இனிப்பான அடையாளம்.கரும்பு அடிமுதல் நுனி வரை ஒன்றுபோல் இருக்காது.நுனிக்கரும்பு உப்புச்சுவையுடனும் அடிக்கரும்பு மிக இனிப்புடனும் இருக்கும்.

உழைப்பின் அருமையைமிக அழகாய் சொல்லித்தருகிறது.நுனிக் கரும்பு போல் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாய் இருந்தாலும் அதன் முடிவில் அடிக்கரும்பு இனிப்பு போல் வாழ்க்கை இனிக்கும்.கரும்பின் மேற்பரப்பில் வளைவுகளும் முடிச்சுகளும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது வாழ்க்கையிலும் கடுமையான சோதனைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து சென்றால்தான் இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பதுதான் இதன் தத்துவம்.

காணும் பொங்கலை கண்டுகொள்வோம்

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் என்று அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.இந்நாளின் சிறப்பே கணுப்பிடி தான். இது ஒருவகை நோன்பு. உடன்பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் வேண்டிக்கொள்வது.

உலகப் பொதுமறை நுாலாகிய திருக்குறளை தமிழுக்கு தந்ததால் திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில் இன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் அழைக்கிறோம். பெண்களின் மாங்கல்ய பலத்திற்காகவும், உடன்பிறந்தோரின் நலனுக்காகவும் கணுப்பண்டிகை என்னும் விசேஷ நிகழ்வு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும், ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து கூடிய விரைவில் மேளச்சத்தம் கேட்க வேண்டுமென வேண்டிக்கொள்கின்றனர்.

செய்ய வேண்டியவை

நண்பர்களை கண்டு, அவர்களுடன் நட்பு பாராட்டி, பார்க், பீச், ஓட்டல், சினிமா என்று சென்று வருவதிலும் ஓர் அர்த்தத்தோடு செய்தால் காணும் பொங்கல் களை கட்டிவிடும். மிக எளிமையாய் ஒன்று செய்யலாம். ஒரு நாளின் முழுவதுமான நம் கொண்டாட்டத்தில் முடிந்த அளவு மரக்கன்றுகளை காணும் இடங்களிலெல்லாம் நடலாம். அருகில் இருப்பவர்களிடம் இதை பராமரிக்கச் சொல்லி வேண்டுகோள் வைக்கலாம். நண்பர்களுக்குள் மரக்கன்றை பரிசாக வழங்கிக்கொள்ளலாம்.

இப்போது நம் காணும் பொங்கல் மனநிறைவோடு மகிழ்ச்சியை கண்ட நாளாய் அமைந்துவிடும். அடுத்த வருடம் அதே மரக்கன்று கொஞ்சம்போல் வளர்ந்திருந்தாலும் நம் சமூகத்திற்கு நம்மால் ஆன கடமையை செய்திருக்கோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

நம் வீட்டிலேயே அனைவரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடலாம். அந்த நேரத்து தொலைக்காட்சி, இணையதள உருப்படிகளுக்கு ஓய்வுக் கொடுத்து விட்டு பேசியபடியே உண்ணலாம். அருமையாக அமையும் அன்று சாப்பிடும் பொங்கல் மட்டுமல்ல, அந்த சூழலும் தான்.அன்று மாலையே பல கலாசார விளையாட்டுகளை தேர்வு செய்து விளையாடலாம். கவிதை, கதை வாசிப்பவர்களை சொல்ல வைக்கலாம். நடனம் மற்றும் இசையில் தேர்ந்தவர்களை செய்ய வைத்து மகிழ்ந்து மகிழ்விக்கலாம்.

மற்றவர்களை மகிழ்விக்க கீர்த்தனைகள் பாடும் அளவிற்கு இசை ஞானமோ, கூட சேர்ந்து ஆட வைக்க குச்சிப்புடி நடனமோ தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. கொண்டாட்டம் என்கிற மனநிலையை ஏற்படுத்தினால் போதும். அந்த சூழ்நிலையை நீங்கள் முன்வந்து உருவாக்குங்கள். நிச்சயம் மற்றவர்கள் பின் தொடர்வர்.

செய்ய வேண்டாதவை

பழையவற்றை ஒழிக்கிறோம் என்று தீயிட்டு கொளுத்துவது. அந்த தீயும் நல்லா கொழுந்துவிட்டு எரிய வேண்டும் என்பதற்காக டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை தீயில் இடுவது

கொளுத்துவதற்கு எதுவும் பழைய, தேவையில்லாத வீணான பொருட்கள் இல்லை. இருந்தாலும் ஏதாவது கொளுத்த வேண்டும் என்பது ஐதீகம் என்று நினைத்துக் கொண்டு நல்ல உடைகளையும் பொருட்களையும் தீயிடுவது

பழைய உடைகளை யார் வாங்கிக் கொள்வர் என்று சொல்லியே சோம்பேறித்தனம் காட்டுவது.தேவையானவர்களை தேடிப்போய் கொடுப்பதில்தான் பண்டிகையின் மகத்துவம் இருக்கிறது என்பதை அலட்சியப்படுத்துவது

டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் எரிவதனால் வெளிவரும் புகை காற்று மண்டலத்தை கெடுத்து விடுவதோடு, நமக்கும் நோயைத்தரும் என்கிற செய்தியை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது

நம் வீடு சுத்தமானால் போதும், பக்கத்து வீடு முதல் நம் தெரு வரை எப்படி வேண்டுமானாலும் ஆகட்டும் என நினைத்து ஆங்காங்கே குப்பையை கொட்டுவது. பண்டிகையின் அழகு போய்விடும். வீண் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டால் என்ன என்று வீண் தைரியம் காட்டுவது

பொங்கல் உணவு மீந்து போன பின்பு கீழே கொட்டுவது. அன்றே நம்மைச் சுற்றியிருக்கும் பல குழந்தைகளுக்கும், வயதில் பெரியவர்களுக்கும் அன்பாய் தேடி போய் கொடுப்பதை கவுரவ குறைச்சலாய் நினைப்பது

கரும்பு சக்கைகளால் தெருவை பூச்சிகள் வரும்படி ஆங்காங்கே குப்பை மேடுகளாய் மாற்றுவது. அது மிக சக்தி வாய்ந்த உரம், வீட்டு செடிகளுக்கான எளிய உரம் என்பதை மறந்துவிட்டது.

ஏரின் பின்னால் தான் உலகம். அதாவது மாடுகளால் தான் உலகமே உழல்கிறது என்பதை மறந்து மாடு மேய்ச்சலையும் அந்த மாடுகளையும் துன்புறுத்துவது

முதன்முறை என்று சொல்லியே பலங்காலமாய் காட்டும் சீரியல்களையும், நடிகையர் பேட்டிகளையும், பொங்கல் என்றால் என்ன என்று சொல்லித்தரும் காட்சிகளையும், 'டிவி'யில் உட்கார்ந்து சுற்றம் மறப்பது

அடுத்த அறையிலும், அடுத்த வீட்டிலும், அடுத்த தெருவிலும் இருக்கும் நம்மவர்களுக்கு இணையதளத்தில் வாழ்த்துவது

வீட்டு பெரியவர்களின் ஆசியை அவர்கள் காலில் விழுந்து வணங்கி பெறுவதை யார் காலிலும் விழுவது பிடிக்காது என்று வீணான உரிமை சுதந்திரம் பேசி இழப்பது

நம் அகத்தையும் புறத்தையும் புதுப்பித்துக் கொள்ளவும் புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திக் கொள்ளவும் தான் இப்படியான பண்டிகைகள்

தை நீராடல் பண்டிகை பற்றியும், பாவை நோன்பின் போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பற்றியும் ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஆகியவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு நாம் ஒவ்வொருவரும் படித்து அறிந்து கொள்வது நம் கலாசாரத்தை காப்பாற்றும் வழியாகும்.

மாட்டுப் பொங்கல் - ஆநிரை பொங்கல்

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். 'ஆ' என்றால் பசு, நிரை என்றால் கூட்டம். பசுக்களின் கூட்டமாய் நடக்கும் பொங்கல் இன்று. இதை கன்றுப் பொங்கல் எனவும், பட்டிப் பொங்கல் எனவும் அழைக்கிறோம்.. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில், எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே, இந்நாளாகும்.அன்று, மாடுகள் கட்டும் தொழுவத்தைச் சுத்தம் செய்வர். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வர். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில், குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவர். கழுத்துக்கு தோல் வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வர்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பர். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வர். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பர். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி, கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என, அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பர். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு, மதுரை மாவட்டத்தில் உண்டு.

பொங்கலோ பொங்கல்! மாட்டுப் பொங்கல்!பட்டி பெருக! பால் பானை பொங்க!நோவும் பிணியும் தெருவோடு போக!என்று கூறி, மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.சல்லிக்காசு ஜல்லிக்கட்டானது

இத்தினத்தன்று முறைமாப்பிள்ளை மீது மஞ்சள் நீர் தெளிப்பது, தமிழக கிராமங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். முந்தைய காலத்தில் இந்திய நாணயமாகிய சல்லிக் காசுகளை, மாடுகளின் கொம்பில் கட்டிவைத்திருப்பர்.

மாட்டை அடக்குபவர்களுக்கே அந்த காசு பரிசளிக்கப்படும். இந்த சல்லிக்காசே பின்னர், ஜல்லிக்கட்டாக மாறி அழைக்கப்பட்டது. வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு என, இதற்கு பல பெயர்கள் உண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us