உலக கலைஞர்களின், 'கணீர்' குரலில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு பாடல்
உலக கலைஞர்களின், 'கணீர்' குரலில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு பாடல்
ADDED : ஜூன் 04, 2019 01:46 AM
சென்னை: அமெரிக்காவில், அடுத்த மாதம் நடக்கும், 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு பாடல், உலக கலைஞர்களின் சங்கமமாக, உலகை வலம் வருகிறது.
அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம், அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து, அடுத்த மாதம், 4ம் தேதி முதல், 7ம் தேதி வரை, அமெரிக்க நாட்டின், சிகாகோ நகரில், 10வது, உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்துகின்றன. இதற்கான மையநோக்கு பாடல், சமீபத்தில் வெளியாகி, உலக இசை ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதாவது, 'எல்லா ஊர்களும் சொந்த ஊரே; எல்லா மனிதர்களும் உறவினர்களே' என்னும் பொருளில் அமைந்த, 'யாதும் ஊரே... யாவரும் கேளிர்' என்ற, புறநானுாற்று பாடலுக்கு, டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து, பல நாட்டு இசைக் கலைஞர்களின் பங்களிப்பில், இசை வடிவங்களை கோர்த்து, இசை அமைத்துள்ளார், ராஜன் சோமசுந்தரம்.
உலகைச் சுற்றுகிறது:
ஆப்பிரிக்க குரலிசையில் தொடங்கி, 'ராக்' இசைக்கு தாவி, 'ராப், பாப்' என்று பயணிக்கிறது. பாடகர் கார்த்திக்கின், இனிமையான குரலில், 'யாதும் ஊரே...' பாடல், உலகைச் சுற்றுகிறது. சீனா, அரேபியா, காலிப்சோ, ஜாஸ், கர்நாடக சங்கீதத்துடன், நாட்டுப்புற இசை என, அனைத்தையும் நெருடல் இல்லாமல், உற்சாகமூட்டும் வகையில் இணைத்துள்ளார், இசையமைப்பாளர்.
வில்லியம் ஹென்றி கர்ரிஅமெரிக்காவின், 40 பெரிய சிம்பொனி குழுக்களை வழிநடத்தியவரான, 'மேஸ்ட்ரோ' வில்லியம் ஹென்றி கர்ரி வழிகாட்டலில், டர்ஹாம் சிம்பொனி வழங்கியிருக்கும் மேற்கத்திய இசை, தடையற்ற அருவியாய் நம் மேல் பொழிந்து, இப்பாடலை வேறொரு தளத்திற்கு உயர்த்தி செல்கிறது.
கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ, இத்தாலிய பாடகி, சார்லட் கார்டினாலே, லண்டனின் ராப் இசை பாடகர் தர்ட்டின் பீட்ஸ் ஆகியோரின் குரலில், பாடல் கம்பீரமாக ஒலிக்கிறது. உக்ரைன் நாட்டின், கிதார் கலைஞர் ஆர்ட்டம் எபிமோவின், ராக் கிதாருடன், ராஜேஷ் வைத்யாவின், கர்நாடக வீணையிசை, ராப் மற்றும் பறையிசை கலக்குமிடம், சிலிர்ப்பூட்டுகிறது. பலவகை இசை மட்டுமின்றி, பலவகை நடனங்களும் கலந்து, வீடியோவாகி இருக்கிறது. இப்பாடலை, https://youtu.be/NtHYz6FuiAc என்ற, இணைப்பில் கேட்டு மகிழலாம்.