ADDED : ஜூலை 04, 2019 11:35 PM

தெற்கு திசை காட்டி வானில் புகழுடன் ஜொலிக்கும் வெள்ளி மீன் வடக்கே போகலாம்; மழைத் துளிகளையே உண்டு வாழும் வானம்பாடிகளை ஏமாற்றி மழை மேகம் ஓடலாம். மலையில் தோன்றி கடலில் கலக்கும் எங்கள் காவிரி தான் உண்ணாவிட்டாலும் குழந்தைக்கு பாலுாட்டும் தாய் போல எங்கள் வயல்களில் தங்க நெல்மணிகளை விளைவிக்க மறக்காமல் வருவாள்!
இதை 'வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும்...' எனத் தொடங்கும் புறநானுாற்றுப்பாடல் கூறுகிறது. தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் கி.ஸ்ரீதரனுடன் கரிகாலனைக் கண்டு பிரமிப்போம். உலகில் மூன்று அணைகள் பழமையானவை. அதில் ஒன்று எகிப்தில் இயற்கையை வழிபடுவோர் கி.மு. 2700ல் கட்டிய 'சாத் - எல் - காபா' அணை. அது தான் வெறும் கற்களால் கட்டப்பட்ட முதல் அணை; முதல் வெள்ளத்திலேயே உடைந்த அணையும் கூட!
கி.மு. 2000ல் கற்களை களிமண்ணால் இணைத்தும் கி.மு. 1730ல் தழை தாவரப் பிசினால் கற்களை இணைத்தும் அணைகளை கட்டினர். அவை இப்போது இடிந்து போயுள்ளன. ஆனால் 2200 ஆண்டுகளுக்கு முன் கருங்கற்களை களிமண்ணால் இணைத்துக் கட்டி இன்னும் உறுதியாக பயன்பாட்டில் இருக்கும் ஒரே அணை கல்லணை. உலக பொறியாளர்களால் பழந்தமிழரின் கட்டடக்கலையை அண்ணாந்து பார்க்க வைப்பதும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள இந்தஅணை தான்.
மண் பரிசோதனை:
அணை கட்ட தேர்ந்தெடுத்த இடத்தையும் அணையின் அமைப்பையும் கண்டு பொறியாளர்கள் மூக்கின் மீது வைத்த கையை எடுப்பதே இல்லை. பருந்து பார்வையில் உயரப்பறந்து படம் எடுத்து மேடு பள்ளம் ஆராய்ந்து மண் பரிசோதனை நீர் பரிசோதனை என பல இத்யாதிகளை செய்து கட்டப்படும் இந்த கால அணைகளிடம் 'வந்து பார்...' என சவால் விடும் வகையில் உள்ள கல்லணை அதிசயங்களின் அதிசயம் என வியக்கின்றனர். அது கடைச்சங்க காலம். சோழ நட்டில் காவிரியும் அரிசிலாறும் பாய்ந்து வளம் சேர்த்தன.
கட்டுப்பாடற்ற காவிரி அடிக்கடி பல இடங்களில் உடைப்பெடுத்து வெள்ளம் பெருகி சோழ நாட்டை சீரழித்தது. அதைத் தடுக்கத் தான் கல்லணையை கரிகாலன் கட்டினான். ஸ்ரீரங்கத்துக்கு முன் அகண்ட காவிரியாய் ஓடும். அங்கு கொள்ளிடம் காவிரியை விட 6 அடி உயரத்தில் இருக்கும். அங்கு காவிரி கரை புரண்டால் வெள்ளநீர் கொள்ளிடத்தில் பாயும். ஸ்ரீரங்கத்தின் கிழக்கு முனைக்கு வரும் போது கொள்ளிடத்தை விட காவிரி 6 அடி உயரத்தில் இருக்கும். அதனால் கொள்ளிடத்தில் வெள்ளம் விரைவாக வடியும்.
அதேநேரம் அங்கு காவிரி உடைப்பெடுத்து கட்டற்று ஓடும் கொள்ளிடத்தில் கலக்கும். இப்படி அடிக்கடி நடந்தால் காவிரி வறண்டு போகும்; வயல்வெளி பயிர்கள் கருகும்; மழை பெய்தும் விவசாயம் பொய்க்கும்; சோழநாடு பஞ்சத்தில் தவிக்கும். இப்படி அடிக்கடி நடந்திருக்க வேண்டும். தன் நாட்டு தண்ணீர் வீணாக கடலில் கலப்பதும் பயிர்கள் தவிப்பதும் கண்டு சிந்தித்தான் கரிகாலன். நீரோட்டத்தையும் நில மட்டத்தையும் ஆராய்ந்தான். ஆனாலும் மணலில் கயிறு திரிக்க முடியாத போது கரை எழுப்ப முடியுமா... முடியும் என்றால் முடியும் எனத் துணிந்தான்.
மணற்பாங்கான இடத்திலும் அணை கட்ட முடியும் என்ற தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளில் அறிமுகமானது கடந்த நுாற்றாண்டில் தான். ஆனால் அதே தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய சாதனையை செய்து 2200 ஆண்டுகளுக்கும் மேலாக 'வாழ்கிறான்' கரிகாலன். அவனால் சோழ நாட்டின் 12.5 லட்சம் ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. காவிரியை விட 5 மடங்கு நீர் செல்லும் கோதாவரி ஆற்று டெல்டாவின் விவசாயப்பரப்பு வெறும் 10 லட்சம் ஏக்கர் தான் என்பதில் இருந்தே சோழர்களின் நீர் மேலாண்மை மதிநுட்பத்தை தெரிந்துகொள்ளலாம்.
வழிகாட்டிய கல்லணை:
இந்த அணையை 1853ல் பார்த்த பிரிட்டிஷ் இன்ஜினியர் பெயர்டு ஸ்மித் என்பவர் 'கல்லணை ஒரு பொறியியல் சாதனை' என தன் வியப்பை பதிவு செய்துள்ளார். இன்றும் தென்னிந்திய அணைக்கட்டுகளின் தந்தை என போற்றப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற பிரிட்டிஷ் இன்ஜினியர் 'தி கிராண்ட் அணைக்கட்' என தன் வியப்பை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். அவர் மனதுக்குள் 'இது எப்படி சாத்தியமாயிற்று...' என்ற கேள்வி வெகுநாட்களாக குடைந்தது. பின் அந்த அணையை ஒட்டி5 மணல் போக்கிகள்அமைக்கும் பணி அவருக்குஒதுக்கப்பட்டது.
அப்போது அணைக்கட்டின் அடித்தளத்தில் 12 அடி வரை தோண்ட வேண்டியது இருந்தது. அப்போது தான் அணையின் கட்டுமானத்தைக் கண்டார். அந்த அணை மிகப்பெரிய பாறைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டதையும் இடைவெளியில் வெறும் களிமண் மட்டுமே இருந்ததையும் அறிந்தார். மணலில் பெருங்கல்லை பதிக்க பள்ளம் தோண்டினால் மணல் சரியும்; நீர் சுரக்கும் என்ற எதார்த்தத்தையும் மீறி யோசித்தார்.
கடற்கரையில் நிற்கும் போது நம்மை நோக்கி வரும் பேரலை காலடியில் இருக்கும் மணலை வாரிச் செல்லும்; காலடி கீழிறங்கும். ஆற்று வெள்ளத்திலும் மிகப்பெரிய பாறைகளை போட்டால் அதன் கீழ் நீர் சென்று மணலை அரிக்கும்; கல் இறங்கும். மேலே கல் போட்டால் மண்ணரித்து கல் களிமண் பாறை வரை சென்று தங்கும் என்பதை உணர்ந்து வியந்தார். இந்த முறையைப் பயன்படுத்தி 1874ல் கோதாவரி ஆற்றின் குறுக்கே தவுலீஸ்வரம் அணைக்கட்டை கட்டி முடித்து பாராட்டு பெற்றார். 'ஆழம் காண முடியாத மணற் படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தை கல்லணை கட்டிய பெயர் தெரியாத அந்த கால மக்களிடம் இருந்து தான் தெரிந்து கொண்டேன்.
'அதை வைத்து ஆற்றுப்பாலங்கள் அணைக்கட்டுகள் என பலவற்றையும் கட்டினேன். இந்த தொழில் நுட்பத்தை கற்பித்த அந்த கால மக்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்' என பதிவு செய்துள்ளார். தற்போது காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர் மேட்டூர் உள்ளிட்ட அணைகள் கட்டிய பிறகும் கூட கல்லணை வழியாக வினாடிக்கு 2 லட்சம் கன அடிநீர் சென்றுள்ளது. ஆனால் எந்த அணையும் கட்டப்படாத 2200 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு நீர் சென்றிருக்கும் என்பதை நினைத்து நீரியல் நிபுணர்கள் வியக்கின்றனர்.
கல்லணையின் கட்டுமானம் குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலையுடன் இணைந்து பொதுப்பணித் துறை இன்ஜினியர்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் பதிவு செய்த கருத்துகள் முக்கியமானவை. காவிரியில் உடைப்பெடுக்கும் இடது கரையில் தொடர்ச்சியாக 1080 அடி நீளத்திற்கு கல்லால் அமைக்கப்பட்ட கரையாக இருக்கலாம். உடைப்பெடுக்கும் இடத்தில் சிறியதும் பெரியதுமான கற்களை தொடர்ந்து கொட்டியிருக்கலாம். 'டம்பிங் ராக் பில்' என்ற இந்த தொழில்நுட்பம் 1850களில் தான் அமெரிக்காவில் அணை கட்ட பயன்படுத்தப்பட்டது.
கற்களை அடுத்து மணல் களிமண் படிமங்கள் என பல ஆண்டுகள் பல பருவங்களில் கொட்டி இந்த அணை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீரோட்ட திசைக்கு குறுக்கே அணை கட்டினால் ஏற்படும் மண்ணரிப்பை விட நீரோட்டத்துக்கு இணையாக அணை கட்டினால் கால் பங்கு மண் அரிப்பு தான் இருக்கும் என்பதை அறிந்துள்ளனர். அவ்வாறே நீரோட்ட திசையிலேயே வளைந்தபடி அணை கட்டியுள்ளனர். முதல் 19 மதகுகள் வரை சிறிய வளைவாகவும் மற்ற மதகுகள் வளைவு இல்லாமலும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கற்கள் ஒன்றை ஒன்று நெருக்கிப் பிடித்து அணைக்கு கூடுதல் பலம் ஏற்படுகிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகம்:
கரிகாலன் என்ற பெயரில் பல சோழ மன்னர்கள் இருந்துள்ளனர். என்றாலும் சங்க இலக்கியங்கள் மற்றும் பிற்கால சோழர் கால இலக்கியங்களின் வழியாக கல்லணையைக் கட்டிய கரிகாலன் காலத்தால் முந்தியவன்; காவிரி கரைகளை சீரமைத்தவன் பிற்கால கரிகாலன் என ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர். கரிகாலனை பின்பற்றி நாட்டில் பல அணைகளை கட்டிய சர் ஆர்தர் காட்டன் பென்னி குயிக் கர்னல் எல்லீஸ் போன்ற பிரிட்டிஷ் இன்ஜினியர்களுக்கும் நாம் நன்றி கூற வேண்டும். காவிரியின் கிளையாறுகள் கால்வாய்கள் வாய்க்கால்கள் மதகுகள் மடைகளின் வழியே சோழ மன்னர்களுடன் பயணித்து பூம்புகாரில் கலப்போம் அடுத்த கட்டுரையில்!
- நடுவூர் சிவா
naduvoorsiva@gmail.com.
''நீரோட்ட திசைக்கு குறுக்கே அணை கட்டினால் ஏற்படும் மண்ணரிப்பை விட நீரோட்டத்துக்கு இணையாக அணை கட்டினால் கால் பங்கு மண் அரிப்பு தான் இருக்கும் என்பதை அறிந்துள்ளனர். அவ்வாறே நீரோட்ட திசையிலேயே வளைந்தபடி அணை கட்டியுள்ளனர்.''
-கி.ஸ்ரீதரன், தமிழக தொல்லியல் துறை முன்னாள் துணை கண்காணிப்பாளர்