பா.ஜ.,வில் இணைந்தார் ஜீவஜோதி; கட்சியை வளர்ப்பேன் என சபதம்
பா.ஜ.,வில் இணைந்தார் ஜீவஜோதி; கட்சியை வளர்ப்பேன் என சபதம்
UPDATED : ஜன 24, 2020 03:04 AM
ADDED : ஜன 24, 2020 01:01 AM

தஞ்சாவூர் :சரவண பவன் ராஜகோபால் வழக்கில் பரபரப்பாக பேசப்பட்ட ஜீவஜோதி, பா.ஜ.,வில் இணைந்தார்.
நாகை, வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடியைச் சேர்ந்தவர் ஜீவஜோதி, 39; இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். தனியார் பள்ளி ஆசிரியரான இவருடன், ஜீவஜோதி சென்னையில் வசித்து வந்தார்.
ஜீவஜோதியின் தந்தை ராமசாமி, சரவண பவன் ஓட்டலில் பணியாற்றி வந்தார். இதன்மூலம், அதன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஜீவஜோதி அறிமுகமானார். ஒரு கட்டத்தில், ராஜகோபால் ஏற்பாடு செய்த கூலிப்படையால், பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டார். தன்னை திருமணம் செய்யவே, தன் கணவரை ராஜகோபால் கொலை செய்ததாக, ஜீவஜோதி அளித்த புகாரின்படி, ராஜகோபால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில், ராஜகோபால் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். கணவர் இறப்புக்கு பின், தஞ்சைக்கு வந்து விட்ட ஜீவஜோதி, தன் பள்ளி தோழரை மறுமணம் செய்து, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, டெய்லர் கடை வைத்து, செட்டிலாகி விட்டார்.
தற்போது, வல்லம் சாஸ்த்ரா பல்கலை அருகே, தன் தந்தை ராமசாமி பெயரில், 'மெஸ்' நடத்தி வருகிறார். அரசியலுக்கு வர ஆசைப்பட்ட ஜீவஜோதி, இரு மாதங்களுக்கு முன், பா.ஜ., மாநில நிர்வாகி வானதி சீனிவாசனை பார்த்து, தன் ஆசையை தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தஞ்சையில் நடந்த, பா.ஜ., புதிய மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில், பா.ஜ., மாநில செயலர் கருப்பு முருகானந்தம் தலைமையில், ஜீவஜோதி, பா.ஜ.,வில் இணைந்தார்.
ஜீவஜோதி கூறுகையில், ''முறைப்படி கட்சியில் சேர்ந்துள்ளேன். பதவி கொடுத்தாலும், கொடுக்கா விட்டாலும், தலைமையின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு, தமிழகத்தில், பா.ஜ.,வை வளர்ப்பதில் என் பங்கு இருக்கும் என, உறுதியாக கூறுகிறேன்,'' என்றார்.