ADDED : அக் 30, 2020 01:08 AM

'கட்டியெடைத் தங்கம் போல் ↔கெட்டி மேனிகை தொழுது வணங்குகின்ற ↔தெய்வ ஞானிஎட்டி நடை போட்டு வந்தால் ↔சிங்கம் தோற்கும்எதிர்கொள்ளும் புலி கூட விலகி ↔நிற்கும்மட்டில்லா உடற்கலைகள் யாவும் ↔கற்றேமலையுறுதி கொண்டயெழில் ↔உடலைப் பெற்றேதட்டில்லா தானங்கள் செய்த ↔பெருமகனார்அவர் தான் தேவர் திருமகனார்'
மனிதனாகப் பிறப்பவர்கள் பலர், ஆனால் மனிதனாக வாழ்பவர்கள் சிலர். மனிதனாகப் பிறந்து, மாமனிதனாக வாழ்ந்து, அரும்பெரும் பணிகள் ஆற்றி, மக்கள் உள்ளங்களில் அமர்ந்திருப்பவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.1908 அக்டோபர் 30ல் பிறந்து, 1963 அக்டோபர் 30ல் விண்ணுலக வாழ்க்கைக்கு சென்றவர். பிறந்த நாளும், மறைந்த நாளும் ஒரே தேதியில் வருவது வெகு சிலருக்கு தான்.
வாழ்வின் இறுதி வரை தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் இரு கண்களாகப் போற்றியவர். தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர் என்ற தாரக மந்திரத்தை வழங்கி, கடைசி வரை அதன் வடிவமாகவே வாழ்ந்தவர். 32 கிராமங்களில் இருந்த சொத்துக்களை, அனைத்து சமுதாய மக்களுக்கும் தானமாக வழங்கிய கொடை வள்ளல் இவர்.
தனிமனித ஒழுக்கம், பிரம்மச்சர்யம், கட்டுப்பாடான வாழ்க்கை, பெருந்தன்மை, தாராளகுணம், மற்றவர்களுக்கு கொடுத்து இன்புற்று மகிழும் எண்ணம் போன்றவை இவர் வாழ்வில் இரண்டறக் கலந்தவை.
மந்திர பேச்சு
'எனக்குப் பாய் தான் தெரியும். பட்டு மெத்தை தெரியாது', 'எனக்கு அடக்கம் தெரியும், ஆடம்பரம் தெரியாது, எனக்கு வாழத்தான் தெரியும், வயிறு வளர்க்கத் தெரியாது', 'எனக்கு பாடுபடத்தான் தெரியும், பதவி சுகம் தெரியாது', 'எனக்குப் பாயவும் தெரியும், பதுங்கவும் தெரியும், பயப்படத் தெரியாது, எனக்கு மக்களைத் தான் தெரியும், மந்திரிகளைத் தெரியாது', 'எனக்கு விவசாயம் தெரியும், வியாபாரம் தெரியாது', 'எனக்கு வெற்றி கொள்ளத் தெரியும். விழா எடுக்கத் தெரியாது, எனக்கு பாசம் கொள்ளத் தெரியும், பகைமை கொள்ளத் தெரியாது, எனக்கு பாராட்டத் தெரியும், பாராட்டு பெறத் தெரியாது'என்ற தன் மந்திர பேச்சின் மூலம் வாழ்க்கையை எளிமையாக அமைத்துக் கொண்டவர்.
நிறைவான வாழ்க்கைக்கு வீரமும் இருக்க வேண்டும். விவேகமும் இருக்க வேண்டும். இவ்விரண்டும், இருந்தால் எந்த ஒரு செயலிலும் எளிதாக வெற்றி பெற முடியுமென்பதை 'வீரமற்ற விவேகம் கோழைத்தனம் விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்' என்றார்.
வாய்ப்பூட்டுச் சட்டம்
தேவர் எதைப் பற்றியும், எங்கும் பேசத் தயங்கியதில்லை. ஊருக்கு நல்லது சொல்ல என்ன தயக்கம் வேண்டிக்கிடக்கு என்று தன் உள்ளத்துக்கு சரி என்று பட்டதைப் பேசும் பழக்கம் உள்ளவர். பதவி என்பதை ஒரு சேவையாக கருதுபவர்கள் வந்தால் தான் இந்த நாடு உருப்படும் என்றார். தேவரின் உரைகள் பல இடங்களில் மக்களை விழிப்படைய வைத்தன. இதனால் இவரின் ஆன்மிகப் பேச்சையும், அரசியல் பேச்சையும் ஆங்கில அரசு கூர்ந்து கவனித்து குறிப்பெடுத்தது.
இதன் எதிரொலியாக வடக்கே திலகருக்கும், தெற்கே பசும்பொன் தேவருக்கும் வாய்ப்பூட்டுச் சட்டம் பாய்ந்தது. இந்த நேரத்தில் மேடையில் இவருக்கு சில வரிகள் மட்டும் பேச அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் பேசிய தேவர், “நான் ஆதியிலும் ஊமையல்ல, வியாதியிலும் ஊமையல்ல, சர்க்கார் போட்ட சட்டத்தால் பாதியிலே ஊமையானேன், இதனைத் திறக்கும் சாவி தான் உங்கள் கையிலுள்ள ஓட்டு” என்றார்.
குற்றப் பரம்பரைச் சட்டம், தொழிற்சங்க போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டம், ஜமீன்தாரி முறை ஒழிப்பு போராட்டம் போன்ற அனைத்திலும் கலந்து கொண்டு, இறுதி வரை போராடி வெற்றி கண்டார்.அரசியல் வானில் அற்புதம்ஓர் உண்மையான அரசியல் தலைவன், மாலையையும், துாக்குமேடைக் கயிற்றையும் சமமாக நினைக்க வேண்டுமென்றார்.
அதிகாரம் மக்களுடையது, அது நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது, ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும் என்ற மனோபாவம் மந்திரிகளுக்கு இருக்க வேண்டுமென்றார்.அவர் போட்டியிட்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காதவராக விளங்கினார். 1937ல், 1947ல் சட்டமன்ற உறுப்பினர். 1952-ல் நடைபெற்ற சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்று, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
பின் 1957ல் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டிலும் வெற்றி பெற்று, சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்தார். பின் 1962 ல் பாராளுமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டு தொகுதிக்கு போகாமல், பிரசாரம் செய்யாமல் வெற்றி பெற்று சாதனை படைத்தவர் தேவர். மத்திய, மாநில அமைச்சர் பதவியை வேண்டாமென மறுத்தவர்.
காசி உரை
தேவர் பல்வேறு இடங்களில் சிறப்பாக உரை நிகழ்த்தி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர். சாயல்குடி விவேகானந்தா சாலையில் தொடங்கிய அவர் சொற்பொழிவு, பல மாநிலங்களைக் கடந்து வரவேற்பைப் பெற்றது.உடலுக்கு வெளி அழகு மாத்திரம் போதாது, அக அழகும், மனதை அடக்கும் ஆற்றலும் ஒருங்கே அமைய வேண்டுமென்றார்.
ஒரு சமயம் காசி ஹிந்து பல்கலையில் ஹிந்து மதம் பற்றி மூன்று மணி நேரம் ஆங்கிலத்தில் தங்கு தடையின்றி பேசினார். இவரின் பேச்சைக் கேட்டு கூட்டத்திற்கு தலைமை வகித்த பல்கலை துணைவேந்தர் சர்.சி.பி. இராமசாமி ஐயர்,' உலகின் பெரும் பகுதியை ஆங்கில மொழி ஆள்கிறது. உலகாளும் அம்மொழியை எங்கள் தமிழ்நாட்டு பசும்பொன் தமிழ்ச்சிங்கம் மூன்று மணி நேரம் அடக்கியாண்டு விட்டது' என்றார்.அந்தளவுக்கு அவருடைய ஆங்கிலப் புலமை இருந்தது.
பர்மாவில் காட்டிய பண்பாடு
ஒருமுறை பர்மாவுக்கு சென்றிருந்தார். அந்த நாட்டிற்கு வரும் முக்கிய பிரமுகர்களை வரவேற்க, ஆயிரக்கணக்கான பெண்களை, விமான நிலையத்திற்கு அழைத்து வந்து, அந்தப் பிரமுகர் விமானத்தை விட்டு இறங்கி நடந்து வரும் போது, அத்தனை பெண்களும், மண்டி போட்டு குனிந்து, தங்களது கூந்தலை தரையில் பரப்பி, அதன் மேல் பிரமுகரை நடந்து வரச்செய்து, தங்களது வரவேற்பை அளிப்பார்களாம்.
இப்படியொரு வரவேற்பு தேவருக்கு ஏற்பாடாகி இருந்தது. இதைக் கண்டு அவர் கொதித்துப் போய் விட்டார். எனது நாட்டில் பெண்களை பராசக்தியாக நினைத்து வணங்குவேன். இந்தத் தவறை நான் செய்யவே மாட்டேன், அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், பர்மாவுக்குள் நுழையாமல், தாய்நாடு திரும்பி விடுவேன் என்றார். உடனே அவருக்கு அளிக்க இருந்த வரவேற்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆன்மிக வாழ்வு
எல்லோரிடத்திலும் தெய்வமுண்டு, ஆனால் எல்லோரும் தெய்வத்திடம் இல்லை. எவரிடத்திலும் தெய்வம் இல்லாமலில்லை. யார் அதை அனுபவிக்கிறார்களோ, அவர்களுக்கு அது கிடைக்கிறது என மிகப்பெரிய தத்துவங்களைச் சொன்னவர் தேவர். வீரத்திற்கு அழகு தன்னடக்கம், அந்த தன்னடக்கத்தை தரும் பக்தியும், வீரமும் இணைந்து இயங்குகிற போது நாட்டை தீமைகள் அண்டாது என்றார்.
வாய்மையும், துாய்மையும் கொண்ட பரிசுத்த அரசியல் வேண்டுமென்றால், அதற்கு தெய்வீக மனப்பான்மை வேண்டுமென குரல் கொடுத்தார். மனித வாழ்க்கையில் வந்தால் போகாதது கீர்த்தியும், அபகீர்த்தியும், போனால் வராதது மரணமும், பிராணமும். வரும் போகும் செல்வமும், தரித்திரமும் என புது புது சித்தாந்தங்களை ஆன்மிகப் பாதையில் காட்டியவர்
.மரணத்தை தவிர வேறு எதையுமே தன்னுடையது என்று மனிதன் உரிமை கொண்டாட முடியாது என்று விளக்கிய தேவர் 55 ஆண்டுகளே, இந்த மண்ணில் வாழ்ந்து அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியவர்.
-ச.திருநாவுக்கரசு
பட்டிமன்ற பேச்சாளர் மதுரை. 98659 96189
