'புராணம் முதல் மன்னர் காலம் வரை பெண்களுக்கு அதிகாரம்!' *மனுதர்மத்தில் சொல்லப்பட்ட உண்மைகள் என்ன?
'புராணம் முதல் மன்னர் காலம் வரை பெண்களுக்கு அதிகாரம்!' *மனுதர்மத்தில் சொல்லப்பட்ட உண்மைகள் என்ன?
ADDED : அக் 31, 2020 12:21 AM
மதுரை:''புராணம் முதல் மன்னர்கள் காலம் வரை, பெண்களுக்கு சம உரிமை, அதிகாரம், சொத்துரிமை கொடுக்கப்பட்டு அரசாண்ட வரலாறு, மனுதர்மத்தில் சொல்லப்பட்டு உள்ளது,'' என, ஆன்மிக ஆராய்ச்சியாளர் அரவிந்த் சுப்ரமணியம் தெரிவித்து உள்ளார்.
அவரது பேட்டி:
மனு தர்மம் எழுதியது யார். எந்த காலத்தில் எழுதப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் எங்கு உள்ளது?
மனு தர்மம் அல்லது மனுஸ்மிருதி எழுதியவர் மனு. இவர் ஒரு அரசர். மனு, ஒருவர் இல்லை. பலவிதமான காலகட்டத்தில், ஒவ்வொரு மனு தலைவராக இருந்து உலகை ஆட்சி செய்வார். ஆட்சி அதிகாரத்தில் உள்ள மனுவால், மக்களுக்கான நெறிமுறை, வழிகாட்டுதலுக்காக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.ஓலைச்சுவடி, கிரந்த சாலைகளில் இருந்து, இதற்கான ஆதாரம் எடுக்கப்பட்டது.
பெண்களை படிக்க வைப்பது தவறு. சொத்துரிமை வழங்கக்கூடாது என மனுதர்மம் சொல்கிறதா?
மனுதர்மத்தில், 9வது அத்தியாயம், 11வது ஸ்லோகம் தான், பல இடங்களில் சொல்லப்படுகிறது. இதில், ஆண், பெண்ணுக்கான வாழ்வியல் நடைமுறை பற்றியும், பொருளாதாரத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு என்பதையும் சொல்கிறது. மகனுக்கு நிகராக மகளுக்கு சொத்துரிமை உண்டு என, 130வது ஸ்லோகம் சொல்கிறது. தவறான புரிதலால், மனுதர்மத்தை பற்றி தவறாக சொல்கின்றனர்.
திருமணம், விவாகரத்து பற்றி சொல்லப்பட்டு இருக்கிறதா?
மனுதர்மம் மட்டுமல்ல திருக்குறள், நன்னெறியில் கூட விவாகரத்து பற்றி சொல்லப்பட வில்லை. மனித வாழ்வு எதை நோக்கி பயணப்படுகிறது. திருமண மந்திரங்கள் எதற்காக சொல்லப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட புதிய சட்டத்தில் விவாகரத்து உள்ளது. அந்த கால கட்டத்தை, இப்போதுள்ள காலகட்டத்தோடு ஒப்பிடுவதே தவறு.
சுதந்திரமாக வாழ பெண்களுக்கு உரிமை இல்லையா?
ஒரு பெண்ணின் இளமைப் பருவத்தில் தந்தை, வாலிப வயதில் கணவன், வயதான காலத்தில் மகன் பாதுகாக்க வேண்டியது கடமை என்று சொல்லியதை திரித்து, ஆணை அண்டி பிழைத்து வாழ்வதாக கதை கட்டுகின்றனர்.
பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக சொல்லப் பட்டு உள்ளதா?
ஒரு ஸ்லோகம் கூட அப்படி சொல்லவில்லை. எங்கேயும் பாலியல் தொழிலாளர்களாக பெண்களை சித்தரிக்கவில்லை. பெண் சக்தி சொரூபம். வேறு யாரும் அவளை கட்டுப்படுத்த முடியாது என்பதை, வேறு விதமாக திரித்து கூறுகின்றனர்.
பெண்கள் தெய்வத்திற்கு சமமாக போற்றப்படும் சூழலில், பெண்களும், கணவனை அனுசரித்து நடக்க வேண்டும் என கூறியுள்ளது. ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போவது நடைமுறை வாழ்க்கை. கன்யா குழந்தை பூஜை, சுமங்கலி பூஜை என்று பெண்களை வழிபடுவது வேறு எந்த நாட்டில், மதத்தில் உள்ளது.
பெண்களின் உரிமைகள் மனுவில் கூறப்பட்டுஉள்ளதா?
புராண காலத்தில், அன்னை மீனாட்சி முதல் மன்னர் காலத்தில் ராணிமங்கம்மாள் வரை, பொருளாதாரத்திலும் கணவனை தேர்ந்தெடுப்பதிலும் அதிகாரம் உள்ளது. ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்வது தான் வாழ்வியல் நெறிமுறைகள். இதை கடைப்பிடிக்காதவர்களுக்கு, தர்மசாஸ்திரம் மட்டுமல்ல எந்த நுாலுமே பயன் தராது. இது, அவரவர் பிரச்னையே தவிர மனுதர்மத்தின் மீதான பிரச்னை இல்லை.மற்ற நாடு, மற்ற மதங்களுக்கு இது புதிதாக இருக்கலாம். ஹிந்து மதத்தில் அப்படி இல்லை.
மனுதர்ம விதிகள் இப்போது நடைமுறையில் இருக்கிறதா?
ஒரு பெண்ணை துன்பப்படுத்துபவனுக்கு கடுமையான தண்டனை கொடுப்பது, அரசு கடமை என மனுதர்மம் சொல்கிறது. இப்போது, வேறு வடிவமாக மாறியுள்ளது.பெண்களுக்கான அன்றைய திருமண வயதும், இப்போதுள்ள திருமண வயதும் மாறியுள்ளது. மாறியதற்கான சூழலையும் கவனிக்க வேண்டும். 'எந்தவிதமான தவறான செயலும் செய்யாமல் பணம் ஈட்ட வேண்டும்' என்பதை தான், மனுதர்மம் சொல்கிறது.