தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம்

ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம்

ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம்


ADDED : நவ 19, 2020 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2020 12:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்களுக்கென்று ஒரு தினம் உண்டா.. அது எப்போது என்று கேள்வி வருகிறது அல்லவா.. காரணம் ஆண்களுக்கான முக்கியத்துவத்தை பெரும்பாலும் இந்த உலகம் கண்டு கொள்வதில்லை. ஆண் என்பவன் கட்டடத்தின் அஸ்திவாரம் போன்றவன் தான். மேலே தெரியும் கட்டடங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. பெண்களைக் கொண்டாடும் அளவிற்கு ஆண்களைக் கொண்டாடுகிறோமா என்றால் பதில் இல்லை என்பதாகவே இருக்கும்.

பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் சமூகம் ஆண்களின் உணர்வுகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை. ஆண்களை எப்படியாக இந்த சமூகம் சித்தரித்து இருக்கின்றது... ஆண் என்பவன் வீரமானவனாகவும், மன உறுதி உடையவனாகவும் தலைமைப் பண்பு மிக்கவனாகவும் சோதனைகள் மிகுந்த போதும் மனம் கலங்காதவனாக மட்டுமே இந்த சமூகம் பார்த்து இருக்கின்றது. மென்மை குணம்கொண்டவர்களையும், அழும் ஆண்களையும் கோழை என்றே சொல்லி வருகிறோம். காரணம் மென்மை குணம்கொண்ட ஆண்களை நாம் விரும்புவதில்லை. ஆண்பிள்ளை அழக்கூடாது. ஆண் குழந்தையை தைரியமானவன் என்றே பழக்கப்படுத்திவிட்டோம்.

ஆண்களுக்கான பிரச்னைகள்


ஆண்களுக்கென்றும் பிரச்னைகள் உண்டு தானே. தனக்கான பிரச்னையை எழுதவோ, சொல்லவோ விரும்பாத ஆண், பெண்களுக்கான பிரச்னைகளுக்காக குரல் கொடுத்ததுண்டு. ஆண்கள் பற்றி பெண்கள் எழுதியதாக பெரிய அளவில் கவிதைகளோ, நுால்களோ இல்லை.ஆனால் ஆண்கள், பெண்களை பெரும்பாலும் புரிந்தவர்கள் தான். அவர்கள் அன்பை உள்ளேயே வைத்துக் கொண்டு வெளியே அடையாளம் காட்டாதவர்கள். பெண்களின் செயல்களிலும் பின்னணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள்தான். தாய்மைப் பண்பு கொண்ட ஆண்களும் உண்டு. பெண்களுக்கெதிராக தீங்கிழைக்கும் ஆண்களும் உண்டு. குற்றம் செய்யும் ஆண்களைத் தண்டிப்பது அவசியமானது. அதே சமயத்தில் ஆண்களே இப்படித்தான் என்று பொதுமைப்படுத்த வேண்டியதில்லை.

சமூக களைகளை கிள்ளி எடுக்க வேண்டிய நேரத்தில், நல்ல செடிகளையும், களைகளாக நினைத்து பிடுங்கி விடக் கூடாது.அப்படி என்னதான் ஆண்களுக்கு பெரிய பிரச்னைகள் இருந்து விடப் போகிறது என்றால் மனரீதியாக, உடல்ரீதியாக பாதிக்கப்படும் ஆண்கள் அதிகம் உண்டு. ஆண் என்பவனின் மீது சுமத்தப்படும் சுமைகள் அதிகம். அந்த சுமைகளை பிறப்பின் போதே ஏற்றி வைத்து விடுகிறது சமூகம். சம்பாதிக்க சிங்க குட்டி பிறந்துட்டான். சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்று அவன் விரும்பியோ, விரும்பாமலோ தலைமைப் பண்பை ஏற்றி விடுகிறோம்.

வாயற்று போனவர்கள்


சம்பாதிக்காத ஆடவனை பெண் விரும்புவதிலை என்பதையே'இல்லானை இல்லாளும்வேண்டாள்மற்றீன்றெடுத்த தாய் வேண்டாள்செல்லா(து) அவன்வாயிற் சொல்'என்று நல் வழி கூறுகிறது.'வினையே ஆடவர்க்கு உயிரே' என்று குறுந் தொகையும் ஆண் மகன் என்பவன் பொருளீட்டுபவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. இல்லத்தரசியாக இருக்கிறேன் என்று சொல்லும் பெண்ணை இயல்பாகவும், இல்லத்தரசனாக வீட்டைப் பார்த்து, குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் ஆணை வித்தியாசமாகவும் தானே நோக்குகிறோம்.கொரோனா காரணமாக தொழில் நெருக்கடியால் வாழ்வாதாரத்தை இழந்த ஆண்கள், விரக்தி அடைந்து விபரீத முடிவு எடுக்கும் செய்திகளை நாளிதழ்களில் பார்க்கும் போது சற்றே எனக்குள் யோசனை தோன்றியது. பெண்களுக்கான பல தளங்கள் இருக்கும் போது ஆண்களின் பிரச்னைகளைப் பேசுவதற்கான தளங்கள் ஏன் இல்லாமல் போனது.'கற்பென்று வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி எங்கே.. வாயற்றுப் போன ஆண்களின் குரலை எப்போது கேட்கப் போகிறோம்.

ஆணின் தியாகம்


எதிர்மறையான ஆண்களைப் பற்றியே பேசும், சித்தரிக்கும் சமூகம் நல்லமனம் கொண்ட ஆண்களைப் பற்றி ஏன் உணர்வதில்லை. ஆண் மகன் என்ற காரணத்திற்காக தள்ளாத வயதிலும் குடும்பத்திற்காக உழைக்கும் ஆணின் தியாகத்தை எப்போது சமூகம் பேசப்போகிறது.குடும்ப வன்முறைச் சட்டம் பெண்களுக்கான சரியான சட்டம் என்ற போதிலும், அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் பெண்களும் உண்டு தானே. அதை என்றாவது உணர்ந்திருக்கிறோமா. ஆணின் பக்கமுள்ள நியாயங்களைக் கேட்டதுண்டா. ஆண்கள் தவறு செய்யவில்லையா என்று இங்கே ஒரு கேள்வி எழும்.ஆனால் எல்லா ஆண்களையும் குற்றவாளிகள் என்ற பொதுதன்மைக்குள் அடக்கி விட முடியாது. குற்றம் செய்யும் ஆண்களின் விழுக்காடுகள் பெரும்பான்மை உள்ளது என்று சொன்னாலும், அதனை மாற்றுவதற்கான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கவில்லை என்பதே நிதர்சனம்.ஆம்பள அப்படித் தான் இருப்பான் என்று ஆண்கள் செய்யும் தவறுக்கு பரிந்து பேசும் நிலைமை மாற வேண்டும். தனி மனித உணர்வுகள் மதிக்கப் பட வேண்டும் என்பது இங்கு பேசப்பட வேண்டியவை.

மன வலிமையா


ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா என்று கேட்டால் வெளித் தோற்றத்திற்கு அவ்வாறாகத் தெரியும்; ஆணால் பெண்களின் கண்ணீர் கண்டு கலங்க கூடிய உள்ளமாகவே ஆண் இருப்பான் என்பதே உண்மை. வீட்டில் அண்ணனாகவோ, தம்பியாகவோ இருக்கும் ஆண் தனக்கான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறான்.ஆண், பெண் சமத்துவம் பேசும் அனைவருமே ஆணின் பங்கினையும், பெண்ணின் பங்கினையும் உணரவே செய்வர். இங்கே யாரும் உயர்வோ, தாழ்வோ இல்லை. அனைவரும் சமம் தான். அவரவர் இருப்பினை சிறப்பாகச் செய்தாலோ போதும்.பெண்களுக்கெதிரான குற்றங்கள் நிகழாமல் இருக்க வேண்டுமெனில் வீடுகளில் அதை உணர்த்தினாலே போதும். பெண் பிள்ளைகளின் வலிகளையும், வேலைகளையும் உணரும் ஆண் குழந்தை யே பின்னாளில் இந்த சமூகத்தில் பெண்களை தன்னைப் போல நினைக்க ஆரம்பிப்பான். அதை வீடுகளில் இருந்தே தொடங்குவதே சரி.தவறு செய்யும் ஆண் பிள்ளையை கண்டிக்கத் தவறும் பெற்றோர் பின்னாளில் சமூகம் கண்டிக்கும் நிலை வரும் போது வருத்தப்பட நேரிடும். பெண் பிள்ளைகளை மதிக்கும் ஆண் போற்றுதலுக்குரியவன் என்பதை 'மாதரைப் போற்றும் கைகளுக்கு மாலைகள் இட வேண்டும்' என்று ஒரு கவிஞர் பாடியது இங்கே நினைவில் கொள்ள வேண்டியது.

சரிபாதி


ஆணிற்குள்ளும் பெண் உண்டு. பெண்ணிற்குள்ளும் ஆண் உண்டு. ஆணும் பெண்ணும் இணைந்தது தான் இந்த சமூகம். எனவே ஆணைத் தனியாகவும், பெண்ணைத் தனியாகவும் பிரிக்க வேண்டியதில்லை. அவரவர்க்குரிய சுதந்திரத்தில் இயங்கினாலே போதும். பெண்களுக்கான வலிகளையும், உணர்வுகளையும் மதிக்கத் தெரிந்த ஆண்கள் நிறைந்த சமுதாயம் மலரும் போது பெண்களுக்கெகிரான குற்றங்கள் குறையும்.ஆணும் பெண்ணும் சரிபாதி என்பதை வீடுகளும், பள்ளியும் உணர்த்த வேண்டும்.நான் ஆம்பளப் பிள்ளைடா என்ற வெற்றுப் பெருமையைத் தவிர்த்து, நான் பெண் பிள்ளையை சமமாக இயங்க வைக்கும் ஆம்பளப் பிள்ளைடா என்று சொல்லும் ஆண் பிள்ளையே போற்றத் தகுந்தவன். அத்தகைய சிந்தனையை வளர்ப்பின் போதே குடும்பத்தில் உருவாக்க வேண்டும்.

நிர்ப்பந்தங்கள்


ஆண்களின் பிரச்னைகளைப் பேசும், அதற்கான தீர்வுகளைச் சொல்லும் ஆலோசனை மையங்களும் இங்கே தேவை. உணர்வு என்பது இங்கே பொது தன்மை தானே.ஆண்கள் கூட்டத்தின் நடுவே தனியாகச் செல்லும் பெண் எப்படி மன நெருக்கடிக்கு உள்ளாகிறாளோ அது போலவே ஆணும் உள்ளாகிறான் என்பது உளவியல் ரீதியான உண்மை.குடும்பமும், சமூகமும் நீ ஆண், நீ தான் இதைச் செய்ய வேண்டும்என்ற நிர்ப்பந்தங்களைத் தவிர்க்க வேண்டும்.

கடன் தொல்லையால் தற்கொலை செய்யும் ஆண்கள், அம்மா, அப்பா, குடும்பம், குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக வெளிநாட்டு வேலையில் தங்கள் கனவுகளைத் தொலைக்கும் ஆண்கள், அப்பாக்கள், சகோதரன்கள் என இங்கு ஆண்களின் பங்கும் போற்றப்பட வேண்டியதே.ஆணின்றி பெண் இல்லை.பெண் இன்றி ஆணும் இல்லை. உலகம் என்னும் வாகனம் இயங்க இரு சக்கரங்களாக ஆண், பெண் இயங்க வேண்டும்.குடும்பத்திற்காக தன்னை உருக்கி, எரியும் மெழுகுவர்த்திகளாக ஒளி தரும் ஆண்களைப் போற்றுவோம்.கணவனாக, தந்தையாக, மகனாக, சகோதரனாக, தாயுமானவனாக விளங்கும் ஆண்களுக்கும் இனிய ஆண்கள் தின வாழ்த்துகள்.-ம.ஜெயமேரி, ஆசிரியை ஊ.ஒ.தொடக்க பள்ளிக.மடத்துப்பட்டி bharathisanthiya10@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us