ADDED : டிச 01, 2020 12:32 AM

'எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி'
என்றான் பாரதி. திடமான நம்பிக்கையுடன் திறமையும், முயற்சியும் கைகோர்க்கின்றபோது வெற்றி வசப்பட்டு விடுகின்றது. வெற்றியை நோக்கிய பயணத்தில் சிலமுறை வாய்ப்புகள் நழுவுகின்றபோது நம் மனமேடையில் சோர்வும், தயக்கமும் ஜோராக அமர்ந்து விடுகின்றன. தோல்விகள் மனதை சுடுகின்றன. அப்படி சோர்ந்து போகும்போதெல்லாம் ' உன்னால் முடியும்' என்று யாரேனும் ஊக்கப்படுத்துகின்றபோது நம் மனம் உற்சாகம் பெற்று வெற்றி பயணத்தை மீண்டும் தொடங்குகிறது.
'ஊக்குவிப்பவர் ஊக்குவித்தால்
ஊக்குவிப்பவரும் தேக்கு விற்பார் '
என்கிறது வாலியின் கவிதை. நாம் தரும் ஊக்கம் ஒவ்வொன்றும் மற்றவரின் ஆக்கத்திற்கு அடித்தளமிடும். ஊக்கமும், பாராட்டும் வெற்றி என்னும் நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கின்றன. பிறரை ஊக்கப்படுத்தும் போதும், பாராட்டும் போதும் ஒரு நல்ல செயல் நடைபெறுவதற்கான முயற்சியில் நாமும் சிறுதுளியாக இருக்கின்றோம்.
ஊக்குவிக்கும் போது பிறர் மனம் உற்சாகம் அடைகின்றது. பாராட்டுகின்ற போது நம் மனம் பக்குவம் அடைகிறது. செயலுக்கு முன்னான ஊக்கமும், செய்த பின்னான பாராட்டும் ஒருவரின் வாழ்க்கையை புரட்டிப்போடும்.திருமந்திரம் தந்த திருமூலர் 'யாவர்க்குமாம் பிறர்க்கு ஓர் இன்னுரை தானே ' என்று சொல்கிறார். நாம் சொல்கின்ற இன்னுரை பலருக்கு முன்னுரையாகி எழுச்சிப்படுத்தி இன்பம் கொடுக்கும். அந்த இன்னுரை ஊக்குவிப்பதாக, பாராட்டுவதாக இருக்கலாமே.
குழந்தைகளுக்கு ஊக்கம்
எங்கள் வீட்டு சுவரில் சின்ன சின்ன கிறுக்கல்கள் ஏதும் இல்லை. புத்தம் புதிதாய் இருக்கிறது என்று சொல்வதில் பெருமையில்லை. கைக்கு எட்டும் உயரம் வரை எங்கள் வீட்டு சுவரில் பிள்ளைகளின் கைவண்ணம்தான். இடைவெளி இல்லாமல் வரைந்துள்ளார்கள். எழுதியுள்ளார்கள். புள்ளி வைக்கும் அளவிற்கு இடம் கிடைத்தாலும் அதில் சிறு ஓவியம் ஒன்றை வரைந்து விடுவார்கள். பார்க்க பார்க்க ஆனந்தம்தான் என நீங்கள் சொல்வீர்கள் என்றால், பிள்ளைகளை ஊக்குவிக்கும் பெற்றோர் நீங்கள்.
கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, பாடல் பாடுவது என ஏதேனும் ஒரு திறமை குழந்தைகளிடம் நிச்சயம் இருக்கும். குழந்தைகளிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து வெளிக்கொணர்வதுதான் பெற்றோர், ஆசிரியரின் தலையாய கடமை. அவர்களின் ஆர்வம், திறமைகளை கண்டறிந்து முதலில் ஊக்குவிக்க வேண்டும். செய்தபின்பு பாராட்ட வேண்டும்.
அடடா, எவ்வளவு அழகாக இந்த ஓவியத்தை நீ வரைந்திருக்கிறாய். உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் என்று நம் விழிகளில் வியப்பைக் கலந்து சொல்கிறபோது குழந்தையின் மனச்சிறகு மகிழ்ச்சி வானில் பறக்கும். புதிதாய் பிறக்கும். நீ ஓவியம் வரைவதற்காக அப்பா இந்த நோட்டினை தருகிறேன். நீ விரும்பும் போதெல்லாம் இதில் வரையலாம் எனச்சொல்கின்றபோது குழந்தை குதுாகலமாகிவிடும். சின்ன வயதில் விதைக்கும் இந்த வார்த்தைகள் குழந்தைகளின் மனதில் வேர்விட்டு, விண் தொட்டு நாளை வெற்றியாளராய் மாற்றும் . புகழின் உச்சத்திற்கு ஏற்றும்.
பங்கேற்பே முதல் வெற்றி
பள்ளியில் கலை இலக்கிய போட்டிகள் என்றாலே மாணவர்களிடம் மகிழ்ச்சி நிரம்பும். பங்கேற்க மனம் விரும்பும். போட்டிகளில் கலந்து கொள்ள மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்றதும், வகுப்பில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் என் பெயரை சேர்த்து கொள்ளுங்கள் என்பார்கள். எத்தனை மாணவர்கள் பங்கு பெற்றாலும், வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் முதல் மூன்று மாணவர்கள் தான்.
இது அனைவருக்கும் தெரியும். அதையும் கடந்து என்னாலும் முடியும் என்று நம்பிக்கை கொண்டு மாணவர்கள் பெயர்களைக் கொடுக்கும் போதே வெற்றியாளர்களாக மாறிவிட்டார்கள். ஆம் போட்டியில் பங்கேற்பதே முதல் வெற்றி. அந்த வெற்றியாளர்களை ஊக்கப்படுத்தி, சாதனையாளராக்கி பாராட்ட வேண்டும். தம்பி இந்த போட்டியில் நீ பங்கேற்றமைக்காக உனக்கு இந்த புத்தகம் பரிசு என்றோ, பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நம் கரவொலியால் வாழ்த்துகள் என்றோ சொல்கின்றபோது நாம் சாதனையாளர்களை உருவாக்க தொடங்கிவிட்டோம் என்றே அர்த்தம். நமது கைதட்டலும், கைகுலுக்கலும் அவர்களுக்கு மாபெரும் அங்கீகாரம்.
ஆக்கம் தரும் ஊக்கம்
படைப்பாற்றலை வெளிப்படுத்த இன்று நம் முன்னே பல களங்கள் இருக்கின்றன. நமது படைப்பு நாளிதழில் வந்ததும் நண்பர்கள் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பாராட்டு மழையில் நனைத்து விடுவார்கள். ஊக்கத்தால் உள்ளம் தொடுவார்கள். நமது படைப்புகளுக்கு மற்றவர்கள் எவ்வாறு ஊக்கமும், பாராட்டும் தருகிறார்களோ அதைவிட பன்மடங்கு மற்றவர்களின் படைப்புகளுக்கு நாம் வாழ்த்தும், ஊக்கமும் தர வேண்டும்.
வள்ளுவர் பொருட்பாலில் 'ஊக்கமுடைமை' என்றொரு அதிகாரமே தந்துள்ளார். ' உடைய ரெனப்படுவது ஊக்கம் ' என்கிறார். உடைமைகளில் எல்லாம் சிறந்து நிற்பது ஊக்கம் என்கிறார்.
வாழ்க்கை பயணத்தில் ஏற்றமும், இறக்கமும் மாற்றத்தைத் தந்து கொண்டே இருக்கின்றன. தினந்தோறும் புதுப்புது நண்பர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் . நமது புன்முறுவல் ஒரு புது நண்பரை உருவாக்கும். நமது ஊக்கமும், பாராட்டும் சோர்ந்து போன ஒருவரை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி பிறரை மகிழ்ச்சிப்படுத்தி நாம் மகிழ்வது என்பார்கள். இருக்கும் காலத்தில் இனிமையான சொற்களைச் சொல்வோம். அன்பால் மனங்களை வெல்வோம்.-மு.மகேந்திர பாபு, ஆசிரியர்அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளி , இளமனுார் மதுரை. 97861 41410