எம்ஜிஆர் மாளிகை' ஆனது அதிமுக அலுவலகம்: பொன் விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு
எம்ஜிஆர் மாளிகை' ஆனது அதிமுக அலுவலகம்: பொன் விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு
UPDATED : அக் 15, 2021 12:24 PM
ADDED : அக் 15, 2021 11:36 AM

சென்னை: அதிமுக.,வின் பொன்விழா கொண்டாட்டம் வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்தனர்.
இக்கட்சி துவங்கப்பட்டு 50வது ஆண்டுவிழாவை தமிழகம் மற்றும் அக்கட்சியின் அமைப்புகள் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும், ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
* அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பித்திடும் வகையில், பிரம்மாண்டமான மாநாட்டை நடத்துதல்.
* பொன்விழா கொண்டாட்ட சிறப்பு இலச்சினை (லோகோ) வெளியிடுதல். பொன்விழா இலச்சினை பதிக்கப்பட்ட, தங்க முலாம் பூசப்பட்ட பொன்விழா பதக்கங்களை அதிமுக முன்னோடிகளுக்கு அணிவித்தல்.
* அதிமுக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை ‛மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்' என்ற தலைப்பில் குறிப்பேடாக அச்சடித்து வழங்குதல்.
* அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ‛புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகை' என பெயர் சூட்டல்.
* அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில், அதிமுக மற்றும் சார்பு அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே சுவர் விளம்பரங்களும், இரட்டை இலை சின்னத்தை பிரதிபலிக்கும் வண்ண விளக்கு அலங்காரங்களும் அமைத்தல்.
* அதிமுக வளர்ச்சிக்காகத் தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத் துறையினர் உள்ளிட்டோருக்கு இந்தப் பொன்விழா ஆண்டு முதல், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, எம்.ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது பெயர்களில் விருதுகள் வழங்கி, கவுரவித்தல்.
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.