தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம் எப்படி இருக்கிறது

இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம் எப்படி இருக்கிறது

இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம் எப்படி இருக்கிறது


ADDED : பிப் 27, 2013 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2013 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று (பிப்., 28) தேசிய அறிவியல் தினம். ஆழ்கடல் ஆராய்ச்சியும், அகன்ற விண்வெளி ஆராய்ச்சியும், ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் அறிவியலின் அதிசயம் இவ்வளவு தான் என்று, நம்மால் அளவிட முடியவில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வானவியல் சாஸ்திரத்தை வகுத்துக் கொடுத்தவர்கள், இந்திய மேதைகள். அறிவியல் சிந்தனைக்கா... நமக்கு பஞ்சம்... இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி பாதை எப்படி இருக்கும். இளைஞர்கள் அறிவியலை விரும்புகின்றனரா... என்ற கேள்விகளுக்கு விடை தேடிய போது...

ஆராய்ச்சியை சந்தையில் வாங்க முடியாது - என்.சிவசுப்ரமணியன், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி, மதுரை: இந்தியா, தகவல் தொழில் நுட்பத்தில் முன்னேறியுள்ளது. ஆனால் அறிவியல் துறையில் அணு மற்றும் விண்வெளி துறையில், இன்னும் பெரிய இடத்தை நோக்கி செல்லவில்லை. மேலை நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய மாணவர்கள் அறிவியலில் ஈடுபடுவது குறைவு தான். ஐ.டி., துறையை தான் அதிகம் விரும்புகின்றனர். அறிவியலைப் பொறுத்தவரை, கற்றுத்தரும் ஆசிரியர்களும் கற்பிக்கும் பாடங்களும் ஒத்துப் போக வேண்டும். மாணவர்களுக்கு புரியும் வகையில் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். பாடத்திட்டத்திலும் பெரிய மாற்றம் வரவேண்டும். பள்ளிகளில் ஆய்வகங்கள் பெயருக்குத் தான் இருக்கின்றன. நவீன கருவிகள், அதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. பள்ளி நிர்வாகங்களும் அறிவியலுக்கு தருவதில்லை. இலவச பாடப்புத்தகம், சைக்கிள், 'லேப்டாப்' வழங்கும் அரசு, அறிவியலை வளர்ப்பதற்கான நிதியுதவியை, உள்கட்டமைப்பை செய்ய வேண்டும். விஞ்ஞான புத்தகம், கருவிகள், பரிசோதனை முறைகள் இருந்தாலும், ஆராய்ச்சியை, சந்தையில் போய் வாங்க முடியாது. பள்ளி, கல்லூரிகளில் படிப்பிற்கும், ஆய்வகத்திற்கும் சமமான நேரம் ஒதுக்க வேண்டும். அறிவியல் கண்காட்சி நடத்தும் போது, பெற்றோர், பிள்ளைகளுக்கு 'மாதிரிகளை' செய்து தரக்கூடாது. இதனால் பிள்ளைகளின் அறிவியல் ஆர்வம், சிந்தனைத் திறன் குறைந்து விடும். அறிவியல் ஆய்வகங்கள், நவீன உபகரணங்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து, மாணவர்களை அறிவியலை நோக்கி ஈர்க்க வேண்டும்.

அதீத அறிவியல் வளர்ச்சி - கே. பாலகிருஷ்ணன், பேராசிரியர், மதுரை காமராஜ் பல்கலை உயிரி தொழில்நுட்பம் மற்றும் நோய்த் தடுப்பாற்றல் துறை: இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்ததை ஒப்பிட்டால், அறிவியல் அறிவு, அதுதொடர்பான உணர்வு, பயன்பாடு, தொழில்நுட்பங்களை கையாளுதல் என, அனைத்திலும் மாணவர்களின் ஆர்வம் வளர்ச்சியை எட்டியுள்ளது. உதாரணாக, கம்ப்யூட்டர், இன்டர்நெட் பயன்பாடு தொடர்பாக மாணவ சமுதாயம் எங்கோ போய்விட்டதை குறிப்பிடலாம். கல்லூரிகளிலும், அறிவியல் தொடர்பான பாடங்களை படிப்பது தான், மாணவர்களின் முதல் விருப்பமாக உள்ளது. அடிப்படை அறிவியலான தாவரவியல், விலங்கியல் தவிர்த்து, தொழில்நுட்ப அறிவியல், 'ஸ்டெம் செல் டெக்னாலஜி', 'பயோ டெக்னாலஜி', 'ஐ.டி.,' மருந்து கண்டுபிடிப்பு மற்றும் அதுதொடர்பான தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி படிப்புக்களையே அதிக அளவில் தேடி செல்கின்றனர். அதேநேரத்தில் அறிவியலில் ஒன்றான 'பொது சுகாதாரம்' தொடர்பான விழிப்புணர்வில் பின்தங்கியுள்ளனர். மாணவர்களிடம் பாலியல் கல்வி தொடர்பாக, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப்படி, 'நோய் தொற்று, அதன் விளைவுகள் குறித்து அறிவியல் ரீதியாக தெரிந்திருந்தாலும், அதை பின்பற்றுவது, பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புடன் இருப்பதில்லை', என கூறப்படுகிறது. கல்வி நிலையங்களில், இதுதொடர்பாக அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இயற்பியலை கற்றுத் தரவேண்டும்

டி.ஷெரீன் யோனகா, எம்.பில்., இயற்பியல் மாணவி, அமெரிக்கன் கல்லூரி, மதுரை: மருத்துவப் படிப்பு கிடைக்காததால் தான் இயற்பியலைத் தேர்ந்தெடுத்தேன். அதன்பின் இயற்பியலின் மீது எனக்கிருந்த ஆர்வத்தை, இப்படிப்பு நிரூபித்துக் காட்டியது. மாணவர்களுக்கு அறிவியலின் மேல் ஆர்வம் இல்லை என்று சொல்ல மாட்டேன். பெற்றோர் தான் புரிந்து கொள்ளாமல், ஐ.டி., துறையை தேர்ந்தெடுக்க வற்புறுத்துகின்றனர். அதிக மதிப்பெண் பெறுபவர்கள் தான் அறிவியலை நேசிக்க முடியும் என்பதில்லை. இந்தியாவில் மேற்குவங்கத்தில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்திற்கு நிறைய திட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் குறைவு தான். எனக்கு பிடித்த அறிவியல் ஹீரோ, இயற்பியல் இயக்கவிதிகளை கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டன் தான். பேராசிரியராக, இயற்பியலை கற்றுத்தர ஆசை. இவ்வாறு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us