கேரள மாநிலத்தில் ஆயுதப்பயிற்சியில் மர்மகும்பல் : மத்திய உள்துறைக்கு அறிக்கை
கேரள மாநிலத்தில் ஆயுதப்பயிற்சியில் மர்மகும்பல் : மத்திய உள்துறைக்கு அறிக்கை
UPDATED : ஏப் 26, 2013 01:42 AM
ADDED : ஏப் 25, 2013 11:42 PM

கேரள மாநிலம்கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நாறாத்து எனும் கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பிற்கு நடுவே இருந்த கட்டடத்தில் ஒரு மர்ம கும்பல் ரகசியமாக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கண்ணூர் போலீசார் சுற்றி வளைத்து 21 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. மேலும், வெளிநாட்டு கரன்சி, ஏராளமான ஏ.டி.எம்., கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த கும்பலுக்கு வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.ஆயுதப்பயிற்சியில் கேரள மாநிலத்தவர் மட்டுமின்றி தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களும் ஆயுதப்பயிற்சி பெற்று சென்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. இதன் மூலம், நாட்டில் வன்முறை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். எனவே, ஆயுதபயிற்சி கும்பலிடம் தேசிய புலனாய்வு துறையினர் விசாரணை செய்யவேண்டும்; என்று கேரள மாநில போலீசார் மத்திய உள்துறைக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
கேரள மாநில ஏ.டி.ஜி.பி., சங்கர் ரெட்டி கூறிய தாவது: மறைமுகமாக ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட கும்பலிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்திருப்பதால் இந்த வழக்கை போலீசார் தீவிரமாக கையாள்கிறோம். இதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை மத்திய உள்துறைக்கு வழங்கியுள்ளோம் என்றார்.
இந்த வழக்கில், கண்ணூர் சரக ஐ.ஜி., மாவட்ட எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., கோழிக்கோடு போலீஸ் கமிஷனர் அடங்கிய போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாநில உள்துறை சிறப்பு விசாரணை குழு கண்ணூர் மாவட்டத்திற்கு வந்து முழுத்தகவல்களை சேகரித்து வருகிறது. ஆயுதபயிற்சியில் ஈடுபட்டு கைதான அப்துல் அசீஸ், பகத், அசீஸ் ஆகியோர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் கண்ணூர் மாவட்ட இந்து ஐக்கிய வேதி செயலாளர் அஸ்வின் குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடதக்கது. எனவே, இவர்கள் வெளிநாடு சென்று ஆயுத பயிற்சி பெற்றனரா? எவ்வளவு பேர் ஆயுத பயிற்சி பெற்றுள்ளனர் என்கிற தகவலையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 21 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபின், மே 8ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. மேலும், இவர்களிடம் விசாரணை செய்ய கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
- நமது நிருபர்-
