அன்னையைப் போல் தெய்வம் இல்லை...: இன்று உலக அன்னையர் தினம்-
அன்னையைப் போல் தெய்வம் இல்லை...: இன்று உலக அன்னையர் தினம்-
UPDATED : மே 12, 2013 12:02 PM
ADDED : மே 12, 2013 11:50 AM

உலகில் எதற்கும் ஈடு இணையற்றது ஒன்று இருக்கிறதென்றால், அது அன்னை தான்.
அனைவருக்கும், அன்னைதான் முதல் தெய்வம். நம்மை உலகுக்கு அடையாளம் காட்டியவர் அன்னை மட்டுமே. வயதான காலத்திலும் அவர்களை அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் மே 2வது ஞாயிறு (மே 12), உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
எப்படி வந்தது. :பண்டைய கிரீசில், 'ரியா' என்ற கடவுளைத் தாயாகக் கருதி வழிபாடு நடத்தப்பட்டது. ரோமிலும் 'சிபெல்லா' என்ற பெண் கடவுளை அன்னையாக தொழுதனர். இன்றைய அன்னையர் தினம் நேரடியாகத் தாய்மார்களை குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. நவீன அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவின், கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அமெரிக்காவை பின்பற்றி இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள், மே 2வது ஞாயிறு அன்று இத்தினத்தை கொண்டாடுகின்றன.சிறந்த சமுதாயத்தை உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு முக்கியம். 'எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான்.
இன்று முடிந்தால் நேரிலோ அல்லது 'மொபைல்' மூலமாகவோ அன்னையருக்கு வாழ்த்துக்கூறி, ஆசிர்வாதத்தை பெற மறவாதீர்.
தாய்மையின் உணவு பராமரிப்புகள் :டாக்டர் ஆனந்திபாபு, மதுரை. 0452-324 2078: தாயின் கருவறைக்குள் 280 நாட்கள் வளரும் சிசுவின் உயிருக்கு தாயின் ரத்தத்தில் உள்ள சத்துக்கள் தான் தொப்புள் கொடியின் மூலம் கிடைக்கிறது. சிசுவின் நீண்ட பயணத்திற்கு தாயின் ஊட்டச்சத்துமிக்க உணவு மிக அவசியம். தாயின் எடை 25 - 35 ஐ.பி., (11.5 - 16 கிலோ) 9 மாதத்திற்குள் அதிகரிக்க வேண்டும். தாயின் எடை குறைவாக இருந்தால் குழந்தையின் எடையும் குறையும். தாயின் எடை அதிகமானால், குழந்தையும் பெரிதாகி, சிசேரியன் செய்ய வாய்ப்பு அதிகம்.அதனால் சமச்சீரான சத்தான உணவை கர்ப்பிணிகள் எடுக்க வேண்டும். புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அதிகளவில் தாய்க்கும் சேய்க்கும் தேவைப்படுகிறது. முட்டை, பால், இறைச்சி உணவு, பருப்பு வகைகளில் புரதச்சத்து கிடைக்கிறது. இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை பீட்ரூட், கீரை, அசைவ உணவுகள், பால் இவற்றில் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் கிடைக்காது என்பதால் இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.இவை மட்டுமின்றி பாஸ்பரஸ், அயோடின், மேக்னிசியம், காப்பர், சோடியம், பொட்டாசியம் புளூரைடு முதலிய தாது பொருட்களும் தேவைப்படுகிறது. டாக்டரின் அறிவுரைப்படி தேவையான மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, கர்ப்பிணிகள் தாங்கள் விரும்புவதை உண்ண அறிவுறுத்தப்படுகிறது. வசதியற்ற பெண்கள் உணவின் அளவு போதுமானதாக உள்ளதா, கர்ப்பிணியின் எடை சரியாக அதிகரித்துள்ளதா என அறிந்து கொள்ள வேண்டும். இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகள் சரியான முறையில் வழங்க வேண்டும். இதைவிட ஒவ்வொரு பெண்ணும் தாய்மையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும்.
ஊனாகி, உடலாகி, உயிராகி.. உயிர் தந்த அம்மா !உடல் தந்து... உதிரம் பெருக்கி... ஆணோ, பெண்ணோ உருவறியாமல்... உவகை பொங்க பெற்றெடுக்கும் அம்மாவை, நினைக்கும் போதே மனம் கசியும், விழியோரம் கண்ணீர் பெருகும். வயிற்றுக்குள் இருக்கும் போது தொப்புள் கொடி வழி உணவூட்டி, பிறந்தபின் பாலூட்டி, வளர்ந்தபின்னும் சீராட்டி... பிள்ளைக்காகவே வாழும் மனித தெய்வம், அன்னையன்றி வேறு யார்? தனக்கென்று எதுவுமே வைத்துக் கொள்ளாத துறவியின் மனப்பக்குவம்... தன் வயிறு காய்ந்தாலும் பிள்ளை வயிற்றை நிறைக்கத் துடிக்கும் கருணை... எந்நேரமும் பிள்ளைகளைப் பற்றியே சிந்தனை... மனிதப் பிறவிக்கு மட்டுமல்ல... உலக உயிர்கள் அனைத்திற்கும் அன்னையே பிரதானம். இன்று அன்னையர் தினம்... உள்ளம் கசிந்துருகி, தாயின் உன்னதத்தை எடுத்துக் கூறும் இவர்கள்... நமது உள்ளத்தின் பிரதிகள் தான்.
அன்னையர் தின உறுதிமொழி:மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயை முதலிடத்தில் வைத்தவர்கள் நம் முன்னோர்கள். இயந்திர உலகில், பேட்டரி போடாத இயந்திர மனிதர்களாய் தன் தேவைகளை தேடி, மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பல பெற்றோர், முதியோர் இல்லத்தில் தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம், 'ஏன் முதியோர் இல்லத்தில் வசிக்கிறீர்கள்' என்று கேட்டபோது.. 'எங்கள் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை; அதனால் முதியோர் இல்லத்திற்கு வந்து விட்டோம்' என்கிறார்கள். தங்கள் பிள்ளைகள், சரியாக கவனிக்க வில்லையென்றாலும், பிள்ளைகளை விட்டுக்கொடுக்காமல் பேசுகின்றனர். ஒரு தாய், பிள்ளைகளிடம் எதிர்பார்பதெல்லாம் அன்பும், அரவணைப்பும் தான். ஒவ்வொரு பிள்ளையும் தன் தாயை புரிந்து, முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல், அன்புகாட்டினால் ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம் தான். உதிரம் கொடுத்து, உயிர் கொடுத்த அன்னையை, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பாத பிள்ளைகளாக இருப்போம். வருங்காலத்தில் முதியோர் இல்லங்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட உறுதியேற்போம்...
ஓலைக் குடிசைக்குள் அம்மாவின் அரவணைப்பு -எம்.சுடர்விழி (உணவு நிறுவன உரிமையாளர், திண்டுக்கல்):''பிழைப்பிற்காக எனது பெற்றோருடன் தாராபுரத்தில் உள்ள குண்டடம் என்ற குக்கிராமத்தில் நான் காலடி எடுத்து வைத்தபோது, ஐந்து வயது சிறுமி. கண்ணுக்கெட்டிய தொலைவில், ஆங்காங்கே குடிசை வீடுகள் மட்டுமே இருந்தன. எனது பெற்றோர், அவர்களாகவே குடிசை வீட்டை அமைத்துக்கொண்டனர். முடையப்பட்ட ஓலைகளை ஒவ்வொன்றாக அடுக்கி, எனது அம்மா கூரை வேய்ந்தது இப்போதும் என் கண்களுக்குள் நிற்கிறது.கால்நடை டாக்டரான அப்பா, மாரிமுத்துவின் மாத வருமானம் வெறும் 99 ரூபாய்தான். கை வைத்தியத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்த எனது அம்மா லோகதேவி, அக்கிராமத்தில் உள்ள அப்பாவி பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதிலிருந்து, விஷக்கடி, பாம்பு கடி, வயிற்று வலி என்று அனைத்து நோய்களுக்கும் மருந்து கொடுத்து பலரை பிழைக்க வைத்தார். உன்னால் என்ன முடியுமோ அதை செய். முன்னுக்கு வருவாய் என்று அடிக்கடி கூறுவார். எனது அம்மா, 73 வயதை கடந்தபின்பும் என்னுடன் இருந்து, இப்போதும் ஆலோசனை வழங்கி வருகிறார். எனக்கு எல்லாமே என் அம்மாதான், என்றார்.
வயிற்றுவலிக்கு வைத்தியம் -கே.கதிர்காமு, அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர், தேனி:எனது தாய் வீரமல்லு அம்மாள், தோட்டத்தில் ஆண்டுக்கூலிக்கு வேலை செய்து எங்களை படிக்க வைத்தார். என்னுடன் பிறந்தவர்கள் நான்கு ஆண், இரண்டு பெண்கள். பல நாட்களில் காலை, மதிய உணவு கிடையாது. இரவு கம்பு, சாமை, சோளம், வரகு ஏதாவது ஒன்றை சமைப்பார். அதில் தண்ணீர் ஊற்றி வைத்து, மறுநாள் காலை, மதியம் அந்த நீரை குடிப்போம். ஆண்டுக்கு ஒருமுறை தான் உடைகளும், நெல் அரிசிச் சோறும் கிடைக்கும். விடுமுறை நாட்களில் தாய்க்கு உதவியாக நாங்களும் கூலி வேலைக்கு சென்று பள்ளி, கல்லூரி செலவை சமாளித்தோம். ஒருமுறை எனக்கு வயிற்று வலி வந்த போது, கூலியாக கிடைத்த சாமையை விற்று, எனக்கு சிகிச்சை அளித்தார். அன்று இரவு அனைவரும் பட்டினியில் தூங்கினோம். இன்று, அம்மாவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சேர்த்து 14 டாக்டர்கள், 10 இன்ஜினியர்கள், ஒரு போலீஸ் அதிகாரி, என அனைவரும் அரசு வேலைக்கு சென்று வளமாக, நலமாக வாழ்கிறோம்.
'காட்டுக்கு போ' -ஆர்.திருநாவுக்கரசு, போலீஸ் துணை கமிஷனர், மதுரை : அம்மா பத்மா, ஆண்டிபட்டி நாச்சியார்புரம் துவக்கப்பள்ளி ஆசிரியர். ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த போது, அம்மா தான் கைப்பிடித்து எழுத கற்றுத் தந்தார். வீட்டிலும், வகுப்பிலும் சினம் காட்டாத நல் ஆசான். காலை 5 மணிக்கு எழும் போதே, வீட்டில் 'சுப்ரபாதம்' ஒலிக்கும். எனக்கு இரண்டு அண்ணன், இரண்டு தங்கைகள். ஐந்து பேருக்கும், அப்பாவுக்கும் சேர்த்து காலையில் சமையல், டிபன் கட்டி கொடுத்து விட்டு அவரும் வேலைக்குச் செல்வார். அப்பா ராமசாமி ரெங்கசமுத்திரம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர். இருவருக்கும் ஆசிரியப் பணி என்றாலும், ஐந்து பிள்ளைகளை வழிநடத்துவது பெரிய விஷயம். விடுமுறையில் வயல் வேலை செய்வோம். ஒரு கையில் மாட்டை கட்டிய கயிறும், மறுகையில் புத்தகமுமாய் பத்தாவது வரை படித்தேன். வாழ்க்கையோடு இணைந்த கல்வியை கற்றுத் தந்தவர் அம்மா.வீட்டுக்கும், பள்ளிக்கும் நான்கு கிலோமீட்டர் தூரம் இருந்ததால், ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரை, விடுதியில் தங்கி படித்தேன். அண்ணனிடம் சைக்கிள் இருந்ததால், என் மதிய உணவை, டிபன் பாக்ஸில் வைத்து அண்ணனிடம் கொடுத்து விடுவார், அம்மா. சனி, ஞாயிறுகளில் அன்னை முகம் தேடி ஓடிவருவேன்.குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, ஸ்ரீவில்லிபுத்தூரில் டி.எஸ்.பி.,யாய் சேர்ந்தேன். அப்போது, சத்தியமங்கலம் காட்டுக்குச் செல்ல விருப்பமுள்ளதா என, கேட்டனர். அம்மாவிடம் சொன்னபோது, சங்கடமின்றி சரியென்று சொன்னார். 2001 முதல் 2007 வரை காட்டில் இருந்தபோது, விழா, விசேஷங்களுக்கு வரமுடியாத நிலை. 'நான் வந்தால், 60 போலீசார் அங்கே தங்க வேண்டும் என்ன செய்வது' என அம்மாவிடம் கேட்டால், 'உன்னால் 60 பேர் தீபாவளி கொண்டாடட்டும். நீ அங்கேயே இரு' என்றார். அம்மாவின் பாதம் தொட்டு வணங்குவேன். எங்கிருந்தாலும் அம்மாவிடம் பேசுவேன்.
ஊருக்கு சூடான இட்லி... எங்களுக்கு பழைய சோறு -பி.கதிரேசன், சிவில் இன்ஜினியர், ராமநாதபுரம் :திருப்புவனத்தில் தந்தை பிச்சை இறந்தபோது, எனக்கு 16 வயது, தம்பியும் சிறுவன். அப்போது எனக்கு ராமநாதபுரம் ஐ.டி.ஐ.,யில் டிராப்ட்ஸ்மேன் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தது. விடுதியில் தங்கி படிக்க வசதியில்லை. எனக்காக, குடும்பத்தோடு ராமநாதபுரம் வந்தார். அரண்மனை புதுஅக்ரஹாரம் ரோட்டில், 30 ரூபாய் வாடகைக்கு ஒரு குடிசையில் வசித்தோம். அதே பகுதியில் இட்லிக்கடை ஆரம்பித்தார். நானும், தம்பியும் ஐ.டி.ஐ., படித்தோம். எனது தாய், ஊருக்கே சுடச்சுட இட்லி அவித்து கொடுத்தாலும், நாங்கள் சாப்பிடுவது பழைய சோறுதான். அதிலும் சில நாட்கள் பட்டினி தான். அவ்வளவு சிரமத்திலும், தீபாவளிக்கு மட்டும் புத்தாடை வாங்கி கொடுப்பார். எனது அம்மா, சேலை வாங்கி பார்த்ததே இல்லை. அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து வீடுகளுக்கு 'தினமலர்' நாளிதழ்களை கொடுக்கும் வேலைக்கு சென்றேன். சனி, ஞாயிறன்று கொத்தனார்களுடன் வேலைக்கு சென்று, எனது தம்பியையும் படிக்க வைத்தோம். டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்தேன். இன்று உள், வெளிநாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி முன்னேற்றம் கண்டுள்ளேன். எனது தம்பியும் போலீஸ் வேலைக்கு சேர்ந்துவிட்டான். என் அம்மா எங்கு சென்றாலும், காரில் அழைத்து செல்கிறேன்.
எங்களுக்காக விழித்திருப்பார் -சி.வெண்ணிலா, உதவி பேராசிரியை, அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, காரைக்குடி :அலங்காநல்லூர் சொந்த ஊர். அம்மா சந்திரா பி.யு.சி., படித்ததால், அப்போதே ரேஷன் கடை பொறுப்பாளராக வேலை பார்த்தார். எங்களை வளர்ப்பதற்காக, வேலையை விட்டார். அப்பா மின்வாரிய உதவியாளர். காலையில் போனால், இரவு தான் திரும்புவார். என்னுடன் பிறந்த தம்பிகள் மூன்று பேர். சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்த அம்மா பட்ட கஷ்டம் இன்று நினைத்தாலும், கண்ணீர் வரும். எங்களை படிக்க வைப்பதில் சோர்ந்து போகவில்லை. நால்வருமே இன்ஜினியரிங் முடித்தோம். மதிப்பெண் குறைவாக வாங்கினால், கண்டிப்பது அம்மா தான். நான் எம்.இ., படித்தபோது, அரசுத் தேர்வுக்கு ஊக்கப்படுத்தினார். அரசு வேலையும் கிடைத்தது. குறிப்பறிந்து செய்பவள் தாய். அந்த தாயை திருப்திபடுத்தினால், இறைவன் அனைத்தையும் நமக்கு அருள்வார்.
நான் சாப்பிட்ட பின்னரே அம்மா சாப்பிடுவார் -என்.கண்ணன் (லாட்ஜ் உரிமையாளர், விருதுநகர்):நாங்கள் விவசாய குடும்பம். 2 பெண், 3 ஆண் குழந்தைகளில் கடைக்குட்டி நான். ஏழு வயதில் தந்தையை இழந்தேன். என்னை அரவணைத்து வளர்த்தது தாய் யசோதையம்மாள்,84, தான். இன்றும் நான், வீட்டிலிருந்து வெளியே சென்றால், வீடு திரும்பும் வரை, எனக்காக காத்திருப்பார். நான் சாப்பிட்ட பின்பே, அவர் சாப்பிடுவார். சிறு வயதிலிருந்தே எந்த பொருளாக இருந்தாலும், எனக்காக ஒதுக்கி வைத்து தருவார். அந்தக் காலத்தில், பருத்தியை எடுத்து பண்டமாற்று முறையில் காரசேவு வாங்கித் தருவார். என்னால் இன்றும் அதை மறக்க முடியாது. மற்ற சகோதர, சகோதரி வீட்டிற்கு சென்றால் கூட, அதிக நாட்கள் இருக்க மாட்டார். உடனடியாக இங்கே வந்து விடுவார். அந்த தாயின் பாசம் யாருக்கு கிடைக்கும்?
அன்னையர் தின சிறப்பு
* அன்னையே...
வாய்மை ஒன்றினையே வாழ்வாகக் கொண்டு
தாய்மை என்பதன் இலக்கணமாய் நின்று
சேய்மை அண்மை இரண்டிலும் நிறைந்து
தூய்மை மனத்துடன் எந்தனை காத்து
மண்ணுலகில் பிறவிதந்து எனைஈன்ற
விண்ணின் சுடராம் ஆதவனை நிகர்க்கும் அற்புதமே!
கண்ணே என்றென தழுவிடும் அன்னையே!
* உந்தன் அன்பினை
ஓங்கி உயர்ந்த மலையென்பேனா!
தாங்கி நிற்றிடும் பூமி என்பேனா!
பொங்கி ஆற்றிடும் கடல் என்பேனா!
எந்த சொல் சொன்னாலும் அன்னை என்ற சொல்லுக்கு எச்சொல்
நிகராகும் அன்னையே இருகரம் கூப்பி தொழுகிறேன் நின்னையே!
வாழும் நாளெல்லாம் வாழ்வாங்கு வாழ்க!
- டாக்டர்.டி.செந்தாமரைச்செல்வி மதுரை, 98421 31345
எல்லா இடத்திலும் நிறைந்த அன்னை-டாக்டர் மனோரமா மதுரை, 86430 23872 : 'இறைவன், தான் எல்லா இடத்திலும் இருக்க முடியாது, என்பதற்காக, தாயை படைத்தான்,' என்பது, சான்றோர் மொழி. உலகில் புனிதமானது ஒரு தாயின் அன்பு அல்லவா? தன்னலத்திற்கும் மேல் ஒரு தாய் பேணுவது, தன் சேயின் நலத்தை அல்லவா? உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவான உணர்வு, தாயின் அன்பாயினும், மனுக்குலத்தின் தாய் தன் குழந்தையை பேணுவது, தன் உயிரையும் தியாகம் பண்ணத் தயங்காமல் பாதுகாப்பது என்று தாய்மையின் வெளிப்படுத்துதல் பூரணமாய் விளங்குகிறது.சரித்திரத்தில் பெருந்தலைவர்களின் வாழ்க்கையைக் காணும்போது, தாயின் வழிநடத்துதல் அவர்களை உயர்த்தியதைக் காண்கிறோம். சத்ரபதி சிவாஜி முதல் மகாத்மாகாந்தி வரை அன்னையின் அறிவுரையைப் பின்பற்றி நடந்து வெற்றி வாழ்க்கை வாழவில்லையா?காந்திஜி தாயின் ஆணைபெற்று, மது, மாது, புலால் ஒதுக்கி, தூய மனிதனாய் நம் மண்ணுக்கு வந்தார். தேச விடுதலைக்குப் போராடி வெற்றி பெற்ற அவருக்கு அந்த மனஉறுதி, சகிப்புத்தன்மை, போராடும் சக்தியும், தாய் கற்றுத் தந்த பாலபாடமே.மனிதனாய் பிறந்தவனுக்கு தாயின் மடியே முதல் பள்ளி. ஆகவேதான் ஒரு பெண்ணை படிக்க வைத்தால், ஒரு குடும்பத்திற்கு கல்வி புகட்டுவதற்கு சமம் என, காந்தஜி கூறினார்.ஒரு பெண்ணின் வாழ்க்கை பூரணப்படுவது, அவள் தாயான பின்னரே. திருமணமாகி இரு ஆண்டுகளுக்குள் தாய்மை அடையாத பெண்களுக்கு தக்க சிகிச்சை செய்து கருத்தருவிக்க, செய்வதே எங்கள் லட்சியம். சோதனைக் குழாய் சிசுமுறையில் இந்த லட்சியம் நிறைவேற பாடுபடுகிறோம். இறை அருளால் நல்ல வெற்றியும் காண்கிறோம்.
தாயில் சிறந்த கோயில் இல்லை - -டாக்டர் ஜே.சி. கணேசன் 98421 03579:''தானம் கோடி செய்வதை விட, தாய்க்கு பணிவிடை செய்வதே மேல்''. அலைமோதும் திருவிழா கூட்டம், அசைந்து ஆடி வருகிறது தேர். கூட்டத்தின் இடையில் ஒரு தாய், இடுப்பில் ஒரு குழந்தையும், கையில் ஒரு குழந்தையுமாக கடவுளை தரிசித்து விட்டு, அக்குழந்தைகளுக்கு திண்பண்டங்களையும், விளையாட்டு பொருட்களையும் வாங்கித்தந்து பத்திரமாகக் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வருகிறாள். அக்குழந்தைகளும் அன்னையின் அரவணைப்பே போதும் என எதுவும் உண்ணாமல் அயர்ந்து உறங்குகின்றன. அவ்வாறு வளர்த்து ஆளாக்கப்பட்ட குழந்தைகள், அன்னையின் வயோதிகத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய வைத்தியம் செய்யாமல், முதியோர் இல்லத்தில். செவிலியரின் பொறுப்பில் தனியாக தவிக்க விடுகின்றனர். இயன்ற அளவிற்கு ஈன்ற அன்னையை இரக்கத்துடன் அரவணைப்பதே அன்னையர் தின வேண்டுகோள்.
நமது கடமை என்ன?- -டாக்டர்.என்.என்.கமாலுதீன் மதுரை, 94433 71676: இன்றைய தாய்குலத்திற்கு சிறப்பு சேர்க்கும் இன்நன்னாளில், செய்ய வேண்டியது என்னவென்று சற்று சிந்தித்து பார்ப்பீர்.தாங்கள் பெற்ற குழந்தைகளை பேணி வளர்த்து சிறப்பு செய்கின்றனர். கணவனுக்காகவும், தம் சார்ந்த குடும்பத்தின் மற்ற அங்கத்தினருக்கும் தங்களின் குறைநிறைகளையும் மறந்து, உடல்நலம், தன்னலம் கருதாமல் வாழ்நாள் முழுதும் சேவை செய்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது உடல்சோர்வு, நலமில்லை என்றாலும் கூட, யாரிடமும் வெளிப்படுத்துவது இல்லை. தாய்க்கு நாம் தான் அவர்களை கூர்ந்து கவனித்து, உடல்நலம் காக்க வேண்டும். பாலூட்டி சீராட்டி வளர்த்த பிள்ளைகள், வயது முதிர்ந்தபின் நம்மை சீராட்டும் என்று எதிர்பார்த்து எந்த தாயும், தன் குழந்தைகளை பேணுவதில்லை. இருப்பினும் தாய்க்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்தால், அதற்கு மிஞ்சிய நற்செயல் உலகில் எதுவும் கிடையாது.வயது முதிர்ந்த அம்மாவை, நாம் அந்தந்த வயதிற்கு ஏற்ப சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், பிறநோய்கள் தாக்காமல் அவ்வப்போது பரிசோதனை செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை பொது மருத்துவ கண்காணிப்பு அவசியம்.
குழந்தைகள் கடவுள் தந்த பரிசுதாய், பரிசாக வந்த கடவுள் :-டாக்டர் குமார் வெங்கடேசன் மதுரை, 0452- 253 3852; அம்மாவின் அன்பும், அரவணைப்பும் குழந்தைக்கு ஆரம்பத்தில் இருந்து தேவைப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் தாயிடம் இருந்து பெறும் தாய்ப்பால் வேறு எவராலும் தரமுடியாத ஒன்று. உலகில் அனைத்து பொருட்களுக்கும் ஒரு விலை உண்டு. தாய்ப்பாலுக்கு மட்டும் விலைகூற முடியாது.அனைவருக்கும் நரகம் மட்டும் இருட்டாக இருக்கும் என நினைப்பதுண்டு. இருட்டிலும் ஒரு சொர்க்கம் என்றால், அது தாய் கருவறை மட்டும்தான்.எந்த ஒரு குழந்தையும் ஆரம்பத்தில் இருந்து தாயின் முகம் பார்த்துதான் வளர்கிறது. குழந்தை முதலில் சிரிப்பதும் அம்மாவின் முகம் பார்த்த பிறகுதான். குழந்தைக்கு தாய் எவ்வளவு அவசியமோ, அதேபோன்று தாய்க்கும் குழந்தை நலம் அவசியம். கர்ப்பம் தரித்தவுடன் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது நலம். மருத்துவரின் ஆலோசனைப்படி நல்ல ஊட்ட சத்துள்ள மருந்துகளை உட்கொள்வது அவசியம். குறிப்பாக பெண்கள் கர்ப்பம் தரித்திருக்கும்போது, டாக்டரின் ஆலோசனையின்றி எந்த ஒரு மருந்தையும் உட்கொள்ளக் கூடாது. திருமணத்திற்கு முன்பே அம்மை போன்ற நோய்கள் வராதவாறு தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுதல் அவசியம். குழந்தைகள் கடவுள் தந்தபரிசு. தாய் பரிசாக வந்த கடவுள். இவர்கள் இருவரையும் பாதுகாப்பது நம் கடமை.
புதுமை பெண்கள் உருவாக... : தன்னை மெழுகுகாக்கி, பிறருக்காக வாழும் அன்னையர்களை சிறப்பிக்கும் விதமாக, 'தினமலர்' மற்றும் ஆரோக்கியா நிறுவனம் இணைந்து, 'அன்னை ஓர் உயிர் ஓவியம்' என்ற நிகழ்ச்சியை, சென்னையில் நடத்தின.முன்னாள் தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன், விழாவில் பேசியதாவது:பெண்கள் எந்த வயதிலும் மனதை மூப்படைய விடக்கூடாது. எந்தவொரு குழந்தைக்கும், முதல் வழிகாட்டி அம்மா தான்.
இத்தகைய பெண்கள், சமூகத்தில் புதுமை பெண்களாய் பரிணமிப்பதில், ஆண்களின் பங்கே அதிகமுள்ளது. சினிமாக்களிலும், 'டிவி' நாடகங்களிலும் சித்தரிப்பதை போல, பெண்களே பெண்களுக்கு எதிரி என்ற நிலையை ஒழிக்க, பாடுபட வேண்டும், என்றார்.
