பஞ்., தலைவரின் மகன் கொடூர கொலை : போலீஸ் விசாரணையில் "திடுக்' தகவல்
பஞ்., தலைவரின் மகன் கொடூர கொலை : போலீஸ் விசாரணையில் "திடுக்' தகவல்
ADDED : செப் 13, 2013 12:16 AM
தஞ்சாவூர்: தஞ்சை அருகே, ஆடு மேய்த்த பெண்ணிடம் வம்பு செய்த விவகாரம் முற்றியதில், ஆவேசமடைந்த, ஆறு பேர் கொண்ட கும்பல், அ.தி.மு.க., பெண் பஞ்., தலைவரின் மகனை, அரிவாளால் வெட்டி கொலை
செய்துள்ளது. இதுதொடர்பாக இருவர், கைது செய்யப்பட்டனர். தஞ்சை அடுத்த, ஏழுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், மணிமாறன்; அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர். இவரது மனைவி பத்மாவதி, தற்போது, இனாத்துகான்பட்டி, அ.தி.மு.க., பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவர்களது மகன், உலகநாதன், 32. இவரது நண்பர் மணிகண்டன், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, உலகநாதன் வீட்டருகே அமர்ந்திருந்தார்.
அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பல், அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களுடன் வந்ததை பார்த்து, மணிகண்டன் தப்பி ஓட முயன்றார். ஆனால், மணிகண்டனை கும்பல் விரட்டி சென்று, சரமாரியாக வெட்டி
யது. பயத்தில் மணிகண்டன், ரத்த காயங்களுடன், உலகநாதன் வீட்டுக்குள் புகுந்து அடைக்கலம் ஆனார். கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானது. உயிருக்கு போராடிய மணிகண்டனை, உலகநாதன் மற்றும்
கிராமத்தினர், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மணிகண்டனை சிகிச்சைக்கு சேர்த்து விட்டு, இரவு, 8:30 மணியளவில் மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியே வந்த உலகநாதனை, டூவீலர்களில் வந்த, ஆறு பேர் கொண்ட கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தது.
அதிர்ச்சியடைந்த உலகநாதன் தரப்பினர், கும்பலை விரட்டி சென்றனர். ஆனால், கும்பல் தப்பியது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட உலகநாதன், சிகிச்சை பலனின்றி, இரவு, 9:15 மணியளவில் பலியானார்.சம்பவம் அறிந்ததும் ஏழுப்பட்டி கிராமத்தினர் மற்றும் அ.தி.மு.க.,வினர், மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இவ்வழக்கில், ஒன்பது பேர் மீது, வழக்கு பதிவு செய்த போலீசார், குருந்தையன், பிரபா ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர்.
விசாரணை நடத்திய, டி.எஸ்.பி., அர்ஜுனன் கூறியதாவது: ஏழுப்பட்டியை சேர்ந்த, நாகராஜன் மனைவி ஜெயஜோதி, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, மின்னாத்தூர் பகுதியைச் சேர்ந்த கர்ணன், ஜெயஜோதியிடம் தகராறு செய்தார். ஏழுப்பட்டிக்கு வந்த, கர்ணன் உறவினரான ரஞ்சித்தை, கிராமத்தினர் அடித்துள்ளனர்.
ஏழுப்பட்டி கிராமத்தினருக்கு ஆதரவாக நடக்காமல், மின்னாத்தூர் ரஞ்சித்துக்கு ஆதரவாக பேசியதாக, உலகநாதன் மீது ஒரு சிலர் ஆத்திரத்தில் இருந்தனர். இவ்விவகாரத்தில், முனீஸ் என்பவர், நேற்று முன்தினம்
இரவு மணிகண்டனை வெட்டி விட்டார். இதன் தொடர்ச்சியாக, உலகநாதனையும் வெட்டிக் கொன்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
