தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தால் இருளில் மூழ்கும் ஆந்திரா

தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தால் இருளில் மூழ்கும் ஆந்திரா

தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தால் இருளில் மூழ்கும் ஆந்திரா


UPDATED : அக் 08, 2013 04:58 AM

ADDED : அக் 07, 2013 12:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2013 04:58 AM ADDED : அக் 07, 2013 12:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத்:தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்களும், காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால், மி்ன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஆந்திரா முழுவதும், இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வன்முறையில் ஈடுபடுவோரை, கண்டதும் சுடுவதற்கு, உத்தரவிடப்பட்டுள்ளது.

'ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு, ஆந்திராவில், தெலுங்கானா அல்லாத சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மக்களிடையே, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த, ஒரு வாரமாக, போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த, 13 மாவட்டங்களிலும், தொடர், 'பந்த்' நடத்தப்பட்டு வருகிறது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. சீமாந்திரா பகுதியில் உள்ள, காங்., அலுவலகங்கள், அடித்து நொறுக்கப்படுகின்றன. தீ வைப்பு சம்பவங்களும் நடக்கின்றன.

ஏற்கனவே, போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ள நிலையில், நேற்று முதல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களும், காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர்.இதனால், ஆந்திராவுக்கு மின்சாரம் வழங்கும், மின் நிலையங்களில், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார பகிர்வு நிலையங்களிலும், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் போராட்டம் காரணமாக, விஜயவாடா அனல் மின் நிலையம் மூடப்பட்டது. இதனால், மின்சார உற்பத்தி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கிராமப் பகுதிகளில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களின், போராட்டம் தொடர்ந்தால், ஆந்திரா முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இதற்கிடையே, போராட்டம் தொடர்வதால், ஜெய்ப்பூர் - சென்னை எக்ஸ்பிரஸ் உட்பட, பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சுட உத்தரவு:

தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் காரணமாக, விஜயநகரம் உட்பட பல பகுதிகளில், நேற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக, அங்கு, தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டதும் சுடுவதற்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் காரணமாக, மருத்துவமனைகள், குடிநீர் வினியோகம், ரயில் போக்குவரத்து ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை

உருவாகியுள்ளது. எனவே, மின்வாரிய ஊழியர்கள் மனிதாபிமானம் கருதி, தங்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப வேண்டும்.

கிரண் குமார் ரெட்டி, ஆந்திர முதல்வர்

சாலையில் இறகு பந்து விளையாட்டு:

தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் காரணமாக, தமிழகத்திலிருந்து, ஆந்திராவுக்கான, சாலைப் போக்குவரத்து முடங்கிஉள்ளது. குறிப்பாக, சரக்கு லாரிகள், சுருட்டப்பள்ளி, நாகலாபுரம் பை - பாஸ், உள்ளிட்ட இடங்களில் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு உள்ளன. நாகலாபுரத்தில், வெறிச்சோடிய சாலையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், இறகுபந்து வலை அமைத்து விளையாடி வருகின்றனர். மின்வாரிய ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால், நாகலாபுரம், சத்தியவேடு, தாசுகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம், நேற்று நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us