டெல்டா மாவட்டங்களில் பராமரிப்பின்றி புத்தர் சிலைகள்
டெல்டா மாவட்டங்களில் பராமரிப்பின்றி புத்தர் சிலைகள்
ADDED : ஏப் 27, 2014 01:02 AM
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த, அய்யம்பேட்டை, ஆயிரவேலி அயிலூர், உள்ளிக்கோட்டை, ஒகுளூர், கரூர், கிள்ளியூர், பட்டீஸ்வரம், பரவாய், புஷ்பவனம், புத்தமங்கலம், புதூர், பெரண்டாக்கோட்டை, பெருஞ்சேரி, மங்கலம், மன்னார்குடி, மானம்பாடி, விக்கிரமங்கலம், விக்ரமம், வெள்ளலூர் உள்ளிட்ட பல இடங்களில், இப்போதும் மகாபுத்தர் வழிபாடு நடைமுறையில் உள்ளது.
அய்யம்பேட்டையில், 'முனீஸ்வரன்' என்றும், பெருஞ்சேரியில்,'ரிஷி' என்றும், புத்தரை வழிபடுகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன், பவுத்த மதம் தமிழகத்தில் பரவிய போது, சோழ நாட்டில், அதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. அதனால், அப்பகுதி முழுவதும், புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டன. பிற்காலங்களில், சிலைகள் பராமரிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டன. தமிழக தொல்லியல் துறை, இருபது ஆண்டுகளுக்கு முன், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகளை கணக்கெடுத்தது. அதில், 70 புத்தர் சிலைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றில், 20 சிலைகளை உள்ளூர் மக்கள் வழிபட்டு வந்தனர். எனவே, அச்சிலைகளை அவர்களின் பொறுப்பிலேயே தொல்லியல் துறை விட்டது. மீதமுள்ள, 50 புத்தர் சிலைகள், போதிய பராமரிப்பின்றி அழியும் நிலையில் இருப்பதாக, தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எனவே, 'டெல்டா மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகளைப் பராமரிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நமது நிருபர் -