மாணவிக்கு மாவோயிஸ்ட் செலுத்திய கல்வி கட்டணத்தை முடக்கிய என்.ஐ.ஏ.,
மாணவிக்கு மாவோயிஸ்ட் செலுத்திய கல்வி கட்டணத்தை முடக்கிய என்.ஐ.ஏ.,
ADDED : டிச 10, 2024 05:12 AM

சென்னை: மாவோயிஸ்ட் அமைப்பு நிதியில் இருந்து செலுத்தப்பட்டதாக, மருத்துவ மாணவியின் கல்விக் கட்டணத்தை முடக்கிய உத்தரவில் குறுக்கிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மாணவியான பூஜாகுமாரிக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்படும் மாவோயிஸ்ட் அமைப்பு கல்விக் கட்டணம் செலுத்தியதாக தெரியவந்தது; 1.13 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, கல்விக் கட்டணத்தை முடக்கி, தேசிய புலனாய்வு முகமை, கடந்த ஜூனில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பூஜாகுமாரி மனு தாக்கல் செய்தார்.
மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
'கல்விக் கட்டணத்தை முடக்கி உள்ளதால், கல்லுாரி நிர்வாகம் சான்றிதழ் தர மறுக்கிறது; விசாரணைக்கு ஆஜராகும்படி என்.ஐ.ஏ., சம்மன் அனுப்பியுள்ளது' என, மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
என்.ஐ.ஏ., தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஆர்.கார்த்திகேயன் ஆஜரானார்.
இதையடுத்து, 'சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளித்து, கல்விக் கட்டண முடக்கத்தை நீக்கும்படி கோரலாம்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
'நன்றாக படிக்கும் மாணவி, எதிர்காலத்தில், பயங்கரவாத அமைப்பில் சேர மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?' என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

