செங்கல்பட்டில் சிக்கிய பயங்கரவாதியிடம் என்.ஐ.ஏ., தீவிர விசாரணை
செங்கல்பட்டில் சிக்கிய பயங்கரவாதியிடம் என்.ஐ.ஏ., தீவிர விசாரணை
ADDED : ஆக 20, 2025 03:40 AM

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில், தினக்கூலி தொழிலாளி போல பதுங்கி இருந்த, லஷ்கர் இ - தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீஹார் மாநிலம், கதிஹார் மாவட்டம், பராரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது, 22. இவர், செங்கல்பட்டு மாவட்டத்தில், தினக்கூலி தொழிலாளியாக கட்டட வேலை செய்து வந்தார். லஷ்கர் இ - தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த இவரை, ஏப்., 26ல், ஏ.டி.எஸ்., எனும் தமிழக காவல் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது, இவரிடம், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
பயங்கரவாதி முகமது, ஜம்மு -- காஷ்மீரிலும், பாக்., ஆக்கிரமிப்பு பகுதியிலும் ஆயுத பயிற்சி பெற்றவர். தன் வருமானத்தில், 40 சதவீதத்தை, வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் வாங்க சேமிக்கும் பழக்கத்தை கொண்டவர்.
அவரிடம் இருந்து, மொபைல் போன் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை ஆய்வு செய்ததில், லஷ்கர் இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இவரது மொபைல் போனுக்கு, உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றிய ரகசிய தகவல்கள் பகிரப்பட்டு உள்ளன.
தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, யோகி ஆதித்யநாத் உயிருக்கு குறி வைத்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. ஐ.டி.ஐ., எனப்படும் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்துள்ள முகமது, வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இவரின் சொந்த ஊரான பீஹாரில் உள்ள பராரி மற்றும் தமிழகத்தில் பதுங்கி இருந்த செங்கல்பட்டு மாவட்டத்திலும் தொடர் விசாரணை நடக்கிறது.
இவர், 'கிரிப்டோகரன்சி' எனும் 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனையிலும் ஈடுபட்டுள்ளார். ஆயுதங்கள் வாங்க, தனக்கு பணம் தேவைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.