கந்து வட்டி சீனாக்காரர்கள் குறித்து திருச்சியில் என்.ஐ.ஏ., விசாரணை
கந்து வட்டி சீனாக்காரர்கள் குறித்து திருச்சியில் என்.ஐ.ஏ., விசாரணை
ADDED : டிச 05, 2024 03:08 AM

சென்னை : கந்து வட்டி தொழில் செய்த சீன நாட்டினர் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள், திருச்சியில் விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் தங்கியிருந்த, சீனாவைச் சேர்ந்த சியாவோயா மாவோ மற்றும், வு யுவான்லுான் ஆகியோரை, நவ., 13ல் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை, மூன்று நாள் காவலிலும் விசாரித்தனர்.
'கிரிப்டோ கரன்சி'
அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேரை நிர்வாக இயக்குனர்களாக நியமித்து, இரண்டு நிறுவனங்களை துவக்கி உள்ளனர். அந்நிறுவனங்களின் பெயரில், மொபைல் போன் செயலியை உருவாக்கி, உடனடி கடன் வழங்கி உள்ளனர்.
இக்கடனை திருப்ப செலுத்த, ஏழு நாள் மட்டுமே அவகாசம் வழங்கி, 49.20 கோடி ரூபாய் வரை கந்து வட்டி வசூலித்தது தெரியவந்தது.
கடன் வாங்கியவர்களை மிரட்டி வசூலித்த தொகையை, 'கிரிப்டோ கரன்சி'யாக ஹாங்காங் அனுப்பியதும் தெரியவந்துள்ளது.
அதன் வாயிலாக, சீன நாட்டினர் வேறு ஏதேனும் சதி திட்டம் தீட்டி இருந்தனரா என்பது குறித்து, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், திருச்சியில் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
சீன நாட்டினரிடம் ஏராளமான, 'டிஜிட்டல்' ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவற்றை, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில், சீன நாட்டினர் குறித்து விசாரித்து வருகிறோம்.
இரண்டு பேர்
சீன நாட்டினரின் புரோக்கர்களாக, திருச்சி மாவட்டம், தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்.
திருச்சியில் சிக்கிய சீன நாட்டினரின் கூட்டாளிகள், கர்நாடக மாநிலம், பெங்களூரிலும் தங்கி கந்து வட்டி தொழில் செய்துள்ளனர்; அங்கேயும் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.