சென்னை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு
சென்னை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு
UPDATED : பிப் 10, 2024 12:16 PM
ADDED : பிப் 10, 2024 07:14 AM

சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, சென்னை, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவை உள்பட 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழகத்தின் கோவையை அடுத்த உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்த 2022, அக்., 23ம் தேதி கார் குண்டு வெடித்தது. இதற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்பவர் பலியானார். தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான இவர், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
உயிரிழந்த முபீனுக்கு உதவியாக இருந்த கோவை, நீலகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த உமர் பாரூக், ஷேக் ஹிதயதுல்லா, பெரோஸ், இஸ்மாயில், சனோபர் அலி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு நிதி திரட்டுதல் மற்றும் தாக்குதல் நடந்த உபகரணங்கள் வாங்குவதற்கு உதவியாக இருந்தவர் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, சென்னை, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவை உள்பட 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவையில் உக்கடம் அல் அமீன் காலனி உள்பட, 12 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். உக்கடத்தில் அபிபுல் ரகுமான் என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் ஏசி மெக்கானிக் பணி செய்து வருகிறார்.
திருநெல்வேலி மாவடத்தில் ஏர்வாடியில் பக்ருதீன் அலி முகமது என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருச்சியில் ரெய்டு
திருச்சியில் பீமநகர், கூனிபஜாரை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் வீட்டிலும், கோட்டை பகுதியில் குத்தூஸ் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.