ADDED : டிச 18, 2024 09:33 PM
சென்னை:சென்னையில் இருந்து மதுரைக்கு, முதன்முறையாக இரவு நேர விமான சேவை நாளை துவங்குகிறது.
சென்னை - மதுரை இடையேயான இரவு நேர முதல் விமான சேவையை நாளை, 'இண்டிகோ' நிறுவனம் துவங்க உள்ளது. சென்னையில் இருந்து இரவு 9:00 மணிக்கு புறப்படும் ஏ.டி.ஆர்., 72 ரக விமானம், இரவு 10:25 மணிக்கு மதுரை சென்றடையும்.
இது குறித்து, மதுரை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
மதுரையில் தற்போது இரவு நேரங்களில் அவசரமாக விமானங்கள் தரையிறங்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விமான தகவல் கட்டுப்பாட்டு கோபுரம், தீயணைப்பு பிரிவு, 'நேவிகேஷன் லைட்' உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தியுள்ளோம். இதனால், இரவு நேர விமான இயக்கம் மேற்கொள்ள முடியும். இரவு நேரத்தில் பயணியரை கையாள்வதற்கு போதுமான ஊழியர்களும் உள்ளனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை, சுங்கத் துறையும் போதுமான ஆட்கள் இருப்பதாக தெரிவித்துள்ளன. எனவே, விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டினால், முழுநேர விமான சேவையை மதுரையில் இயக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

