என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் சங்க பேச்சுவார்த்தை தோல்வி
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் சங்க பேச்சுவார்த்தை தோல்வி
ADDED : அக் 15, 2024 06:08 AM
புதுச்சேரி: என்.எல்.சி., நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக சொசைட்டி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க கோரி நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி.,யில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ. 1.5 லட்சம், சொசைட்டி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத அடிப்படையில் ஒரு மாத சம்பளம் ரூ. 20,908 போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை சொசைட்டி ஒப்பந்த தொழிலாளர்கள் ஏற்க மறுத்து, நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் தங்களுக்கும் ரூ. 1.5 லட்சம் போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக சென்னை மத்திய தொழிலாளர் துறை துணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மத்திய தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
உதவி ஆணையர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். என்.எல்.சி., உதவி முதன்மை மேலாளர் சதிஷ்குமார், சி.ஐ.டி.யு., பொது ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்க தலைவர் பழனிச்சாமி, பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
இருதரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
சி.ஐ.டி.யு., பொது ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் கூறுகையில்; 'உதவி ஆணையர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. கோரிக்கையை வலியுறுத்தி 15 மற்றும் 16ம் தேதி தெருமுனை பிரச்சாரம், 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என்றார்.