மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு கூடுதல் ஆவணங்கள் தேவையில்லை
மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு கூடுதல் ஆவணங்கள் தேவையில்லை
ADDED : செப் 03, 2025 10:52 PM
சென்னை:ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை, வேறு நபரின் பெயருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் நடைமுறையை, மின் வாரியம் எளிமையாக்கி உள்ளது.
தமிழகம் முழுதும் மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பு, சொத்து விற்பனை, மின் நுகர்வோர் உயிரிழப்பு காரணமாக, வேறு நபரின் பெயருக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த சேவைக்கு, மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு, 'நோட்டரி' உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கேட்டு, அலைக்கழிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, அந்த சேவை தற்போது எளிமையாக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:
சொத்து விற்பனையின் கீழ், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய, சொத்து விற்பனை பத்திரம் அல்லது சமீபத்திய சொத்து வரி ரசீது அல்லது நீதிமன்ற உத்தரவு ஆகிய ஏதேனும் ஒன்றுடன், உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
உயிரிழந்த நபரின் பெயரில் உள்ள மின் இணைப்பை மாற்ற, தாசில்தார் வழங்கிய வாரிசு சான்று அல்லது உள்ளாட்சி சொத்து வரி ரசீது, ஆகிய ஏதேனும் ஒன்றுடன் காப்புறுதி, பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்களை பெற்று, மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும்.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மின் இணைப்பு பெயர் மாற்றம் கோரி வரும் விண்ணப்பங்களுக்கும், இதே நடைமுறையை பின்பற்றவும் என, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

