பா.ஜ., உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: ஜெயக்குமார்
பா.ஜ., உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: ஜெயக்குமார்
UPDATED : ஜன 29, 2024 02:47 PM
ADDED : ஜன 29, 2024 12:02 PM

சென்னை: தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் இனி பா.ஜ.,வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடக்கில் இண்டியா கூட்டணி, நெல்லிக்காய் மூட்டை போல சிதறிக்கொண்டு இருக்கிறது. அதே நிலைமை தமிழகத்திலும் வரும்.
திமுக கூட்டணியில் உள்ளவர்கள் எல்லாம் ஒரே கொள்கையில் ஊறியவர்கள் அல்ல; முரண்பாடுகள் உள்ளன. பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என பலமுறை கூறிவிட்டோம். தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் இனி பா.ஜ.,வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அந்த பெட்டியை கழற்றிவிட்டோம்; இனிமேலும் அந்த பெட்டியை இன்ஜினுடன் சேர்க்கும் எண்ணமில்லை.
அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தவே பேசி வருகிறார்; பா.ஜ.,வை முன்னிலைப்படுத்தவில்லை. நடக்காத விஷயத்தை கூறி திசை திருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார். அவரை போல 'அண்ணே அண்ணே' என்று நாங்கள் கூழைக்கும்பிடு போடுபவர்கள் கிடையாது. கூழைக்கும்பிடு போட்டு, இங்குள்ள மக்களை ஏமாற்றி காலூன்ற நினைத்தால் அது வீணாக தான் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.