ஐந்து நாட்கள் சட்டசபை கிடையாது; சொந்த ஊருக்கு சென்ற எம்.எல்.ஏ.,க்கள்
ஐந்து நாட்கள் சட்டசபை கிடையாது; சொந்த ஊருக்கு சென்ற எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : ஏப் 10, 2025 05:40 AM

சென்னை: சட்டசபைக்கு ஐந்து நாள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
தமிழக சட்டசபையில், மார்ச் 14ம் தேதி பொது பட்ஜெட், 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 24ம்தேதி முதல், துறை வாரியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்து வருகிறது. அமைச்சர்கள் தங்கள் துறை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இன்று மகாவீர் ஜெயந்தி என்பதால், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 12, 13ம் தேதி, சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை நாட்களாகும். மேலும், 14ம் தேதி தமிழ் புத்தாண்டு என்பதால், அன்றும் அரசு விடுமுறை. எனவே, இன்று முதல், 14ம் தேதி வரை, சட்டசபை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று சட்டசபை முடிந்ததும், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மீண்டும் 15ம் தேதி சட்டசபை கூட உள்ளது.