ரயில் பாதைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு இல்லை; சேலம் கலெக்டர் ஆபீஸ் ஜப்தி
ரயில் பாதைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு இல்லை; சேலம் கலெக்டர் ஆபீஸ் ஜப்தி
ADDED : டிச 12, 2024 12:54 PM

சேலம்: சேலம் - கரூர் அகல ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்காததால், கோர்ட் உத்தரவுப்படி, சேலம் கலெக்டர் ஆபிஸ் ஜப்தி செய்யப்பட்டது.
சேலம் - கரூர் அகல ரயில் பாதை திட்டம் கடந்த 20 ஆண்டுக்கு முன் கொண்டு வரப்பட்டது. ரயில் பாதை அமைப்பதற்காக சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இது நடந்து 22 ஆண்டுகளாகியும் தற்போது வரை நிலம் கொடுத்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இழப்பீடு கிடைக்காதவர்கள், உரிய இழப்பீட்டை பெற்றுத் தருமாறு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட், இழப்பீட்டை வழங்குமாறு சேலம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கோர்ட் உத்தரவிட்டும், இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்த கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இன்று காலை சேலம் கலெக்டர் ஆபிஸில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தை கோர்ட் அமினாக்கள் ஜப்தி செய்தனர். அங்கிருந்த தளவாடப் பொருட்கள் அனைத்திற்கும் சீல் வைத்தனர்.
சேலம் கலெக்டர் ஆபிஸில் வழக்கம் போல அலுவல் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த ஜப்தி நடவடிக்கையால், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.