காங்கிரஸ் இல்லாத பாரதம், கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும்
காங்கிரஸ் இல்லாத பாரதம், கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும்
UPDATED : ஜன 15, 2024 01:50 AM
ADDED : ஜன 15, 2024 01:29 AM

ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர், அர்ஜுன் சம்பத்: லோக்சபா தேர்தலில் மோடியின் வேட்பாளருக்கு, எங்கள் ஆதரவு இருக்கும். காங்., இல்லாத பாரதம், கழகங்கள் இல்லா தமிழகம் உருவாக வேண்டும். தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் நாம் தமிழர் என, நான்கு முனை போட்டி வர போகிறது. இதில், 40 தொகுதிகளிலும், பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்.
டவுட் தனபாலு: இது என்ன மாதிரியான கணக்குன்னு புரியலையே... இதே மாதிரி, 2016 சட்டசபை தேர்தலில் நான்கு முனை தேர்தல் நடந்தப்ப, அ.தி.மு.க., ஈசியா ஆட்சியை தக்க வைத்தது... அதே மாதிரி இப்பவும், ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பல கட்சிகளுக்கும் சிதறி, 40 தொகுதிகளையும், தி.மு.க., கூட்டணி அள்ளிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: கோவை மாநகராட்சியில், தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளான, காங்., - இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் மற்றும் ம.தி.மு.க., கவுன்சிலர்களுக்கும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, பொங்கல் பரிசுத் தொகை அடங்கிய, 'கவர்' வழங்கியுள்ளார். அதில், 1 லட்சம் ரூபாய் இருந்தது.
டவுட் தனபாலு: தீபாவளிக்கு சொந்த கட்சி கவுன்சிலர்களை கவனிச்சிட்டு, பொங்கலுக்கு மட்டும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மீது அமைச்சருக்கு பாசம் பொங்குதே... இந்த, கவர் கொடுக்கிற வேலை எல்லாம், லோக்சபா தேர்தலுக்கு அவங்களை, 'கவர்' பண்ண தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: பா.ஜ., கூட்டணியை விட்டு, அ.தி.மு.க., ஏன் வெளியே வந்தது என்பது குறித்து, எங்கள் பொதுச்செயலர் பலமுறை தெரிவித்து விட்டார். தமிழகத்தின், 234 தொகுதிகளிலும், எல்லாம் அறிந்து கொள்ளும் வகையில் இதை சொல்லி விட்டோம். அதன் பிறகும் யாருக்கும் சந்தேகம் இருந்தால், ஓட்டு எண்ணும் போது தான், எந்த கட்சி, எங்கு உள்ளது என்பது குறித்து தெரிய வரும்.
டவுட் தனபாலு: சிறுபான்மை யினர் ஓட்டுகளை அள்ள தானே, பா.ஜ., கூட்டணிக்கு முழுக்கு போட்டீங்க... அதை கெடுக்கிற மாதிரி ஆளுங்கட்சி யும், பா.ஜ.,வும் செயல்படுறதால, நீங்க எதிர்பார்த்த மாதிரி சிறுபான்மையினர் ஓட்டுகளை லோக்சபா தேர்தலில் அறுவடை செய்ய முடியுமா என்பது, 'டவுட்' தான்!