'சமையலும் கிடையாது; சாப்பாடும் கிடையாது 'வீக் எண்ட்'னா வீட்டுக்கு போயிடுங்க!' ஆதிதிராவிடர் நல விடுதிகளில் அலப்பறை
'சமையலும் கிடையாது; சாப்பாடும் கிடையாது 'வீக் எண்ட்'னா வீட்டுக்கு போயிடுங்க!' ஆதிதிராவிடர் நல விடுதிகளில் அலப்பறை
ADDED : நவ 27, 2025 12:44 AM
சென்னை: ஆதிதிராவிடர் நல விடுதி சமையலர்கள், வார இறுதி நாட்களில் சமைக்க மறுப்பதும், மாணவர்களை கட்டாயமாக வெளியேறும்படி வற்புறுத்துவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும் 1,331 சமூக நீதி விடுதிகளில், 60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி உள்ளனர்.
சென்னை, மதுரை, கோவையில் செயல்படும் 50 விடுதிகளில், பொதுச் சமையலறை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
பிற மாவட்ட விடுதிகளில், அங்கேயே உணவு சமைத்து, மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு சமையலர், உதவியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் செயல்படும் சமூக நீதி விடுதிகளில், வார இறுதி நாட்களில் சமைக்க மறுப்பதும், விடுதியில் உள்ள மாணவர்களை கட்டாயமாக வீட்டுக்கு செல்லும்படி வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இது குறித்து, மாநில ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டமைப்பு தலைவர் ஏ.பூமிநாதன் கூறியதாவது:
எங்களது குழு சார்பில், மாவட்டந்தோறும் ஆய்வு மேற்கொண்டபோது, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்படும் விடுதிகளில், வார இறுதி நாட்களில், சமையலர்கள் சமைக்க மறுப்பதும், மாணவர்களை வீட்டிற்கு செல்லுமாறு வற்புறுத்துவதும் தெரியவந்தது.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை. தினசரி வீட்டிலிருந்து கல்வி நிலையத்திற்கு வர முடியாத மாணவர்கள் தான் விடுதியில் தங்குவர்.
ஆனால், ஊழியர்களின் இத்தகைய அலட்சிய போக்கு, பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
இதனால், மாணவர்கள் சேர்க்கை விகிதம் பாதிக்கப்படுகிறது. துறை செயலர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், விடுதிகளில் நேரில் ஆய்வு செய்யாமல் இருப்பதே, இப்பிரச்னைக்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

