காப்புரிமை மீறல் இல்லை கொடி வழக்கில் த.வெ.க., பதில்
காப்புரிமை மீறல் இல்லை கொடி வழக்கில் த.வெ.க., பதில்
ADDED : ஜூலை 31, 2025 01:38 AM
சென்னை: 'அரசியல் பங்களிப்பை தடுக்கவே, கொடியில் இடம்பெற்றுள்ள வர்ணங்களை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் த.வெ.க., பதில் அளித்துள்ளது.
'த.வெ.க., கொடியில் இடம்பெற்றுள்ள, சிவப்பு, மஞ்சள், சிவப்பு வர்ணங்கள், எங்கள் கொடியில் இடம் பெற்றுள்ளன. எனவே, த.வெ.க., அந்த வர்ணத்தில் கொடியை பயன்படுத்த, தடை விதிக்க வேண்டும்' என, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் விஜய் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, த.வெ.க., சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விபரம்:
த.வெ.க., கொடியில் இடம்பெற்ற வாகை மலர்-, வெற்றியின் சின்னம்; இரட்டை போர் யானைகள்-, தமிழ் ராணுவ வரலாறு; பச்சை மற்றும் நீல நிறத்தில் 28 நட்சத்திரங்கள், -நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கத்தை குறிக்கும். வண்ணங்களான -அடர் மெரூன், மஞ்சள் தமிழ் கலாசாரத்துடன் ஆழமான தொடர்பு கொண்டவை.
த.வெ.க., கொடியைப் பயன்படுத்துவதில், எந்த காப்புரிமை மீறலும் இல்லை. வழக்கு வணிக முத்திரை சட்ட விதிகளின் கீழ் வராது. உள்நோக்குடன் தாக்கல் செய்த இந்த வழக்கை, அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.