விமான பயணியர் அணியும் நகைக்கு சுங்க வரி கூடாது: கோர்ட் உத்தரவு
விமான பயணியர் அணியும் நகைக்கு சுங்க வரி கூடாது: கோர்ட் உத்தரவு
ADDED : டிச 05, 2024 05:37 AM

புதுடில்லி: 'தனிப்பட்ட முறையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள விமான பயணியர் அணியும் நகைகளுக்கு சுங்க வரி விதிக்கக் கூடாது' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் இருந்து விமானத்தில் டில்லி வந்துள்ளார். அவர் அணிந்திருந்த, 200 கிராம் தங்கத்துக்கு, விமான நிலையத்தில் சுங்க வரி மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவை பறிமுதல் செய்யப்பட்டன.
வரி விதிக்கப்பட்டதை எதிர்த்தும், நகைகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடக் கோரியும் அந்தப் பெண் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த டில்லி உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
விமானப் பயணியர் எடுத்து வரும் பொருட்கள் தொடர்பாக சட்ட விதிகளில், 2016ல் திருத்தம் செய்யப்பட்டது. அந்த விதிகளின்படி, பயணியரின் தனிப்பட்ட உடைமைகளில், நகைகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், 1988 விதிகளில், தனிப்பட்ட முறையில் அணியும் சொந்தமான நகைகள், பயணியரின் உடைமையாக பார்க்கப்பட்டது.
புதிய திருத்தத்தின்படி, பயணியர் எடுத்து வரும் அல்லது அணியும் எந்த நகைக்கும் சுங்க வரி விதிக்கப்படுகிறது. பயணியர் அந்த நகைகளை, வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்ததாகவே, இந்த விதியின்படி கருதப்படுகிறது. இது தவறாகும்.
நகை மற்றும் பயன்படுத்தும் சொந்த நகை என்பதற்கு வேறுபாடு உள்ளது. வழக்கமாக ஏற்கனவே அணியும் நகைகள், இங்கே வாங்கப்பட்டிருக்கலாம். அதை அணிந்து அவர்கள் வெளிநாடு சென்று, திரும்பியிருக்கலாம். அதை வெளிநாட்டில் வாங்கியதாக கருதி, எப்படி வரி விதிக்க முடியும்.
ஏற்கனவே உள்ள விதிகளின்படி, பயன்படுத்தும் அல்லது அணியும் பழைய நகைகளுக்கு, சுங்க வரி விதிக்க கூடாது. உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் இதை உறுதிபடுத்துகின்றன.
அதனால், இந்த பெண் அணிந்திருந்த நகைகளை, அவருடைய உடமையாகவே பார்க்க வேண்டும். அதற்கு வரி மற்றும் அபராதம் விதிக்க முடியாது. மேலும், உடனடியாக அந்த நகைகளை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.