ADDED : பிப் 24, 2026 04:03 AM

சென்னை: பள்ளிகளில் இறுதி தேர்வுகள் துவங்கியுள்ளதால், பகல் நேர மின் சாதன பராமரிப்பு பணிக்கு மின் வாரியம் தடை விதித்துள்ளது.
துணைமின் நிலையங்கள், மின் வினியோக சாதனங்களில், எப்போதும் மின்சாரம் செல்கிறது. அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த பணி நடக்கும் இடங்களில், காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
தற்போது, பள்ளிகளில் இறுதி தேர்வுகள் துவங்கியுள்ளன. விரைவில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. இது தவிர, வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தலும் நடக்கிறது.
இதையடுத்து, மின் சாதனங்களில், பகல் நேரங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள, மின் வாரியம் தடை விதித்துள்ளது. இதனால், இனி பகலில் ஐந்து மணி நேரம் மின் தடை செய்யப்படாது.
மின்னழுத்த பிரச்னை உள்ள இடங்களில் மட்டும் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.

