18ல் பத்திரப்பதிவு இல்லை: 20ல் கூடுதல் டோக்கன்கள்
18ல் பத்திரப்பதிவு இல்லை: 20ல் கூடுதல் டோக்கன்கள்
ADDED : ஜன 14, 2025 03:40 AM

சென்னை: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை கருதி, சனிக்கிழமைகளில் செயல்படும், 100 சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு, வரும், 18ல் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அதிக பத்திரங்கள் பதிவாகும், 100 சார் - பதிவாளர் அலுவலகங்கள் மட்டும் சனிக்கிழமையும் செயல்பட்டு வந்தன.
பொதுமக்கள் தங்கள் வேலைக்கு விடுப்பு எடுக்காமல், வார இறுதி விடுமுறை நாளில் பத்திரங்களை பதிய, இது உதவியாக உள்ளது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும், 17ம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இதனால், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், சனி, ஞாயிறுகிழமைகளிலும் ஊரில் இருக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் வைத்து, வரும் 18ம் தேதி சனிக்கிழமைகளில் செயல்படும், 100 சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து, வரும், 20ம் தேதி தை மாதத்தில் முதலாவது முகூர்த்த நாள் வருகிறது.
இந்த நாளில், அதிக எண்ணிக்கையில் மக்கள் பத்திரங்களை பதிய வாய்ப்புள்ளது. இதற்கு உதவும் வகையில், 20ல் அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும், பத்திரப்பதிவுக்கான கூடுதல் டோக்கன்கள் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.
வழக்கமாக, 100 பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களில், 150 டோக்கன்களும், 200 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்களும் வழங்கப்படும். அத்துடன், 12 தட்கல் டோக்கன் வழங்கப்படும் இடங்களில் கூடுதலாக, நான்கு டோக்கன்கள் வழங்கப்படும் என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.