தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் குறித்து ஆவணம் இல்லை: கவர்னர் ரவி
தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் குறித்து ஆவணம் இல்லை: கவர்னர் ரவி
ADDED : நவ 15, 2024 09:20 PM

சென்னை: '' தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் குறித்த ஆவணங்கள் இல்லை,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த பழங்குடியினர் பெருமை நாள் தின நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: பழங்குடியின மக்கள் நாட்டிற்கு ஏராளமான பங்களிப்பை அளித்துள்ளனர். நாடு சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.வளர்ச்சி பழங்குடியினர் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.மக்கள் தொகையில் அவர்கள் 10 கோடி பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். நாடு முன்னேறி செல்லும் போது பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் விடப்பட்டனர். பழங்குடியினர் அரசியலில் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர்கள் ஓட்டு வங்கி அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். பிரதமர் மோடி வந்த பிறகே இந்த நிலை மாறத் துவங்கியது.
நமது மாநிலத்திலும் பழங்குடியினர் உள்ளனர். அவர்கள் குறித்து முழு ஆவணம் இல்லை. அவர்களிடம் ஆதார் இல்லை. இதனால், அரசின் நலத்திட்டங்கள் அவர்களிடம் சென்றடையவில்லை.இது போன்று நாட்டின் மற்ற பகுதிகளிலும் நடந்தது. இது மிகவும் கவலைளிக்கும் விஷயம். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் போதிய சாலை வசதிகள் இல்லை. பழங்குடியினர் மீதான தவறான பார்வை வெட்கக்கேடானது. அவர்களின் உடையை வைத்து கேவலமாக பார்க்கும் சூழல் உள்ளது. இது மாற வேண்டும்.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, அவரின் அனைத்து திட்டங்களும், அரசின் பலன்களும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சென்றடைந்தது. இதில் எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை. பிர்சா முண்டாவின் தியாகம் ஆவணமாக்கப்படவில்லை. கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு வரை யாருக்கும் தெரியவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. அரசில் இருந்தாலும், அரசில் இல்லாவிட்டாலும் பழங்குடியினருக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் அவர்கள் இடம்பெற அவர்களை அரவணைக்க வேண்டும். இவ்வாறு ரவி பேசினார்.

