உணவு பொருட்கள் சப்ளை இல்லை: மதிய உணவு திட்டம் தடுமாற்றம்
உணவு பொருட்கள் சப்ளை இல்லை: மதிய உணவு திட்டம் தடுமாற்றம்
UPDATED : ஜூன் 29, 2025 02:16 AM
ADDED : ஜூன் 28, 2025 07:06 PM

சென்னை:'கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்துள்ள நிலையில், மதிய உணவு திட்டத்திற்காக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள், சில மாவட்டங்களில் வழங்கப்படவில்லை' என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, வெஜிடபிள் பிரியாணி, கொண்டை கடலை சாம்பார், மசாலா முட்டை என, மதிய உணவு வழங்கப்படுகிறது. மொத்தம் உள்ள 43,131 சத்துணவு மையங்கள் வழியே, மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யப்படுகிறது.
இம்மையங்களுக்கு தேவைப்படும், அரிசி, பருப்பு, எண்ணெய், உப்பு உள்ளிட்ட பொருட்கள், 45 நாட்களுக்கு ஒரு முறை அரசு தரப்பில் மொத்தமாக வழங்கப்படும்.
நடப்பு கல்வியாண்டில், பள்ளிகள் திறந்து மூன்று வாரங்கள் ஆகியும், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில், மையங்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் வழங்கப்படவில்லை.
சத்துணவு ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
பள்ளிகளில் காலை உணவு திட்டம் அறிமுகமான பிறகு, அதிகாரிகள் அதற்கு தரும் முக்கியத்துவத்தை, மதிய உணவு திட்டத்திற்கு அளிப்பதில்லை.
புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில், பள்ளிகள் துவங்கி மூன்று வாரங்களாகியும், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படவில்லை. பள்ளி இறுதித் தேர்வின் போது, வழங்கப்பட்ட பொருட்களை காரணம் காட்டி தாமதித்து வருகின்றனர்.
முட்டை மட்டும் கிடைத்துள்ளது, விதிகளின்படி, 45 நாட்களுக்கு ஒரு முறை சத்துணவு மையங்களுக்கு பொருட்கள் அனுப்ப வேண்டும். எனவே, அனைத்து மையங்களுக்கும் தேவையான பொருட்களை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.