சட்டவிரோத கட்டுமான பணி நடக்கவில்லை: மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம்
சட்டவிரோத கட்டுமான பணி நடக்கவில்லை: மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம்
UPDATED : ஏப் 18, 2024 09:04 PM
ADDED : ஏப் 18, 2024 08:11 PM

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் சட்ட விரோதமாக நடப்பதாக தகவல் வெளியான நிலையில் சட்ட விரோத பணிகள் எதுவும் நடக்கவில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்த அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்து, 2019 ஜனவரியில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் திட்ட மதிப்பீடு ரூ.1977.8 கோடி. ஜப்பான் பன்னாட்டு ஜெய்க்கா நிதி நிறுவனம் 82 சதவீத்த் தொகையாக ரூ1627.70 கோடி கடனுக்கான ஒப்பந்தம் 2021 மார்ச்சில் கையெழுத்தானது. சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஜெய்க்கா நிறுவனத்திடமிருந்து கடன் பெற்ற நிலையில் 2023 ஆக.17ல் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. 33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. கட்டுமான ஒப்புதல் கோரி தமிழகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு 2024 பிப். 27ல் விண்ணப்பம் அனுப்பப்பட்டது.எல் அன்ட் டி நிறுவனத்திற்கு கட்டுமான டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் 2024 மார்ச் 14 ல் அந்நிறுவனம் கட்டுமான பணிகளை துவக்கியது.
கட்டுமானம் தொடர்பான புகைப்படங்கள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணி விவரங்களை
எய்ம்ஸ் நிர்வாகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதியே இன்னும் பெறவில்லை என்ற தகவல் சமூக வலைதளத்தில் வெளியானது.
எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை ஏப். 27 ல் தான் தமிழக அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு வழங்கியது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு செய்து மாநில அரசிடம் சமர்ப்பித்த பின்பே மருத்துவமனை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற முடியும். சுற்றுச்சூழல் அனுமதி பெறும் வரை அந்த வளாகத்தில் வேலி மற்றும் பாதுகாவலர் அமர்வதற்கான கூரை மட்டுமே அமைக்க முடியும். வேறு எந்த கட்டுமானப் பணிகளை எழுப்பினாலும் அது சட்டவிரோதம் என மத்திய அரசின் 2010, ஆக. 19 நாளில் வெளியிட்ட அலுவல் உத்தரவு தெரிவிக்கிறது.
தற்போது மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகள் சட்ட விதிமீறல் என்று சமூக வலைதளத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து எய்ம்ஸ் நிர்வாகம் ஒரு அறிவிப்பை எக்ஸலத்தில் வெளியிட்டுள்ளது அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டுமான பணி எதுவும் நடைபெறவில்லை; கட்டுமான பணிக்கு முன்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் ஆணைய அனுமதி பெற்று பின்பே கட்டுமானம் தொடங்கப்படும் என வெளியிட்டுள்ளது.

