ADDED : மார் 05, 2024 05:47 AM

சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தன்னை அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, செந்தில் பாலாஜி சார்பில் தாக்கலான மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை துணை இயக்குனர் கார்த்திக் தாசரி தாக்கல் செய்த பதில் மனு விபரம்: வழக்கு, தற்போது குற்றச்சாட்டு பதிவுக்கான கட்டத்தில் உள்ளது. இந்த கட்டத்தில் வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் மனு விசாரணைக்கு உகந்ததல்ல.
சட்டப்படி விசாரணை நடத்தி தான், வழக்குப்பதியப்பட்டுள்ளது. பழிவாங்கும் நோக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று கூறுவதை மறுக்கிறோம்.
மோசடி குற்றத்தில் மனுதாரருக்கு பங்கு உள்ளது. சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது என, நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டி உள்ளன. எனவே, வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல.
தாமதம் இன்றி, இந்த வழக்கின் விசாரணையை துவங்க, அமலாக்கத்துறை தயாராக உள்ளது. எனவே, வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

