ADDED : ஜூலை 08, 2025 10:41 PM
சென்னை:கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் வழங்க, கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவதை கண்டித்து, 24 விவசாய சங்கங்கள், நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளன.
தமிழ்நாடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, 17,000 கோடி ரூபாய் அளவிற்கு, பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பயிர்க் கடன் கேட்கும் விவசாயிகளின், 'சிபல் ஸ்கோர்' கேட்பதுடன், ஜாமின்தாரர் நேரில் ஆஜராக வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ சாகுபடி துவங்கி உள்ளது.
இந்த நேரத்தில், கடன் வழங்க நிபந்தனைகள் விதிக்கப்படுவதால், சாகுபடிக்கு பணமின்றி விவசாயிகள் தவிக்கின்றனர்.
மத்திய அரசின் கூட்டுறவு துறை வழிகாட்டுதலின்படி, சிபல் ஸ்கோர் கேட்கப்படுவதாக கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால், அதிருப்தி அடைந்துள்ள, 24 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து, நாளை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.

