எத்தனை 'கெட்டப்' போட்டு வந்தாலும்... யாரைச் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
எத்தனை 'கெட்டப்' போட்டு வந்தாலும்... யாரைச் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
ADDED : பிப் 14, 2025 03:20 PM

சென்னை: நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை 'கெட்டப்' போட்டு வந்தாலும் களம் நமதே என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கட்சி தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்குத் தமிழக மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆதரவு வெற்றியாய் எதிரொலிக்க உங்களில் ஒருவனான நான் நம்புவது உடன்பிறப்புகளான உங்களின் உழைப்பைத்தான். அந்த உழைப்பே தி.மு.க.,வை ஆறாவது முறையாக ஆட்சிக்குக் கொண்டு வந்தது. ஆட்சியில், மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவித்து, அதனை முழுமையாகச் செயல்படுத்திடும் வகையில் அயராமல் உழைக்கின்ற காரணத்தினால்தான் மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது.
தமிழகம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற லட்சிய நோக்கத்துடன் நமது திராவிட மாடல் அரசு செயலாற்றி வரும் நிலையில், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய பா.ஜ., அரசு நமக்குரிய நிதியை வழங்காமல் தமிழக மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. மாநில உரிமைக்கு எதிரான பா.ஜ., அரசின் பழிவாங்கும் போக்கையும் எதிர்கொண்டு இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியிருக்கிறோம். மத்திய அரசின் நிறுவனங்களும், நிதி ஆயோக் போன்ற அமைப்புகளும் வெளியிடும் புள்ளிவிவரங்களில் தமிழகம் பல்வேறு இலக்குகளில் சிறந்து விளங்குகிறது.
தமிழகத்தை பா.ஜ., வஞ்சித்தாலும், தி.மு.க மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த மக்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் திராவிட மாடல் அரசின் நலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயனளித்து வருகின்றன.தமிழக மக்களுக்கு எதிரான, தமிழகத்துக்கு எந்தப் பயனுமில்லாத, கள்ளக் கூட்டணி வைத்திருக்கிற, காசு வாங்கிக் கொண்டு கூவுகிற அந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்து தி.மு.க.,வின் வெற்றியை உறுதி செய்வோம். அந்த வெற்றியை அடைவதற்கான நிர்வாக வசதிக்காகத்தான் மாவட்டக் கழக நிர்வாகத்தில் மாற்றங்கள் தொடங்கியுள்ளன.
தமிழக மக்கள் மனதில், குறிப்பாகப் பெண்கள் - இளைஞர்கள் ஆகியோரிடம் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள தி.மு.க., தோழமைக் கட்சியினரும் வரும் சட்டசபை தேர்தலிலும் வெற்றி முத்திரை பதிப்பதைத் தடுக்க முடியாது என்பது அரசியல் எதிரிகளுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி, வாக்கைச் சிதறடிக்க நினைக்கும் கூட்டணி என நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை 'கெட்டப்' போட்டு வந்தாலும் களம் நமதே! மக்களின் ஆதரவு நம் பக்கமே! மக்களுக்குத் துணையாக நிற்போம்! கவனமாக உழைப்போம்! வெற்றி நமதே!. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

