ADDED : அக் 07, 2025 08:58 AM

சென்னை: எத்தனை பேர் களம் இறங்கினாலும், திமுக கூட்டணி மக்கள் ஆதரவோடு வெற்றி பெறும் என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: இந்தியாவின் தலைமை நீதிபதி கவாயை நோக்கி, ஒரு வழக்கறிஞர் செருப்பை எடுத்து வீசி இருக்கிறார். சனாதனத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது, சகித்துக் கொள்ளாது என்று கூச்சலிட்டு இருக்கிறார். அம்பேத்கர் கொள்கை வழியில், வளர்ந்தவர் இன்றைய தலைமை நீதிபதி கவாய். அவர் சனாதன சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை விசிக மிக வன்மையாக கண்டிக்கிறது. அவரை தற்போது கைது செய்து இருக்கிறார்கள் என்றாலும், அவருடைய வழக்கறிஞர் தகுதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அவரை உபா சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவதற்கும், அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்கும், ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கும் ஜனநாயக சக்திகள், விழிப்பாக இருக்க வேண்டும் என்று விசிக சார்பில் அறைக்கூவல் விடுக்கிறேன். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பயணம் தொடங்கி, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நடிகர் விஜயும் அதேபோல, தொடங்கி கரூர் வரை பயணம் செய்து இருப்பதை நாம் அறிவோம். தேமுதிகவும் அதே போல ஒரு பயணத்தை மேற்கொண்டு இருக்கிறது.
இந்த வரிசையில் பாஜவும் இன்றைக்கு புறப்பட்டு இருக்கிறது. 2026ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலையொட்டி, இத்தகைய பயணங்கள் மேற்கொள்ளப்படுவதை நாம் அறிவோம். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, கட்டுக்கோப்பாக இருக்கிறது. தமிழக மக்களின் நன்மதிப்பையும், நல் ஆதரவையும் பெற்று, வலிமையோடு இயங்குகிறது. எத்தனை பேர் களம் இறங்கினாலும், இந்த கூட்டணி மக்கள் ஆதரவோடு வெற்றி பெறும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.