ADDED : நவ 18, 2025 06:47 AM

சபரிமலை: சபரிமலையில் ஸ்பான்சர் என்ற பெயரில் இடைத்தரகர்களை அனுமதிக்க முடியாது என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சபரிமலையில் தேவையற்ற வழக்கங்கள் தடை செய்யப்படும். இங்கு ஸ்பான்சர் செய்வதாக கூறி வருபவர்கள் யார் என்றும் அவருடைய வருமானம் எப்படி வருகிறது என்பதை பற்றியும் விசாரித்த பின்னரே அனுமதி வழங்கப்படும். இது தெரியாமல் ஐயப்பனுக்கு யாரேனும் ஏதாவது கொண்டு வந்தால் அதை தேவசம்போர்டு பெற்றுக் கொள்ளாது.
நன்கொடையும், ஸ்பான்சர்ஷிப்பும் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் அவர் நேரடியாக தேவசம்போர்டை அணுக வேண்டும். இடைத்தரகர்களை அணுகக்கூடாது. தங்கம் கொள்ளை விவகாரத்தில் நடைபெறும் விசாரணைக்கும், விசாரணை குழுவுக்கும் முழு ஒத்துழைப்பை தேவசம்போர்டு வழங்கும். இதுவரை என்னை ஒரு அரசு உயர் அதிகாரியாகத்தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பொறுப்பில் நான் சற்று கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கும் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

