மின் வாரியத்தில் இனி பேப்பர் கிடையாது: எல்லாம் டிஜிட்டல் மயம்
மின் வாரியத்தில் இனி பேப்பர் கிடையாது: எல்லாம் டிஜிட்டல் மயம்
ADDED : அக் 31, 2024 03:58 AM

சென்னை : மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட, அனைத்து வகை கோப்புகளையும் கையாளுவதில், வெளிப்படைத்தன்மை ஏற்படுத்த, முழுக்க 'டிஜிட்டல்' முறைக்கு மாறுகிறது, தமிழக மின் வாரியம். நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.
தமிழக மின் வாரியத்தின் கீழ், மின் பகிர்மான கழகம், மின் உற்பத்தி கழகம், பசுமை எரிசக்தி கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. மின் சாதனங்கள் கொள்முதல், கட்டுமானம் உள்ளிட்ட பணிகள், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக செய்யப்படுகின்றன.
இப்பணிகளுக்கு மதிப்பீடு தயாரிப்பது, ஒப்புதல் பெறுவது, அனுமதி அளிப்பது போன்றவற்றுக்கு, காகித கோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அலுவலர்கள் தயாரித்து, உயர் அதிகாரிகள் வழியாக, மின் வாரியத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவர்.
இது தவிர, மாவட்ட மற்றும் மண்டல அலுவலகங்களில் செய்யப்படும் முக்கியப் பணிகளுக்கு, தலைமை அலுவலக உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக, தபால் அல்லது பணியாளர்கள் வாயிலாக கோப்புகள் அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்படுகிறது.
கோப்புகள் தயாரிக்க, அதிக காகிதம் பயன்படுத்துவதால், செலவு அதிகமாகிறது. கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்வது, கோப்பை வேண்டுமென்றே தொலைத்து விடுவது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன.
இதற்காக, 'இ - ஆபிஸ்' எனப்படும் கணினி வாயிலாக கோப்பு கையாளும் முறை, 2021ல் அமல்படுத்தப்பட்டது.
எனினும் காகித கோப்பு தொடர்ந்தது. இதை முழுதுமாக தடுக்க, மாவட்ட, மண்டல அலுவலகங்களில் இருந்து, தலைமை அலுவலகத்தில் ஒப்புதல் பெற, காகித கோப்பிற்கு பதில், கணினி வழி நடவடிக்கைகள், நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
இதேபோல், தலைமை அலுவலகத்தில், மதிப்பீட்டிற்கு ஒப்புதல் பெறுவது, அனுமதி அளிப்பது, விஜிலென்ஸ் மற்றும் அமலாக்க பிரிவு கோப்புகள் என அனைத்தும், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதனால், எந்த கோப்பு, எந்த அதிகாரியிடம், எவ்வளவு நேரம் இருந்தது என்பதை அறிய முடியும். தாமதம் செய்யாமல், விரைந்து ஒப்புதல் பெற உதவும் இந்த முறையால், வெளிப்படைத்தன்மை ஏற்படும் என, மின் வாரியம் கருதுகிறது.

