ADDED : அக் 28, 2025 06:38 AM

சென்னை: ராமதாசுடன் சமாதானத்திற்கு வாய்ப்பில்லை என , பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வெடித்த மோதல், 10 மாதங்களை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே, அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக, செப்., 11ல் ராமதாஸ் அறிவித்தார்.
இருவரையும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் சண்முகம், பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா ஆகியோர் சந்தித்து, சமாதானமாக செல்லுமாறு வலியுறுத்தினர்.
ஆனால், 'சட்டசபை தேர்தலில் கூட்டணி முடிவு மற்றும் வேட்பாளர்களை நானே தீர்மானிப்பேன்' என, ராமதாஸ் திட்டவட்டமாக கூறியதால் சமாதானம் ஏற்படவில்லை.
பா.ம.க., செயல் தலைவராக, தன் மூத்த மகள் ஸ்ரீகாந்தியை, ராமதாஸ் நேற்று நியமித்தார்.
இந்நிலையில், பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, செய்தித் தொடர்பாளர் பாலு, எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், சிவக்குமார் மற்றும் மாவட்டச் செயலர்களிடம், அன்புமணி நீண்ட நேரம் பேசியுள்ளார்.
அப்போது, 'ராமதாசுடன் இனி சமாதானத்திற்கு வாய்ப்பே இல்லை. நாம் தனி கட்சியாக செயல்பட வேண்டும். நாம் தான் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும். ராமதாசை, இரண்டு பெண்கள் தவறாக வழிநடத்து கின்றனர்' என கூறியதாக தெரிகிறது.
தேர்தல் கமிஷன், அன்புமணியை அங்கீகரித்திருப்பதால், கூட்டணியில் கணிசமான இடங்களை பெறலாம் எனவும் நம்பிக்கை அளித்ததாக, அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

