சொத்துவரி வசூலில் இனி கறார் காட்ட வேண்டாம்; தேர்தல் வருவதால் மாநகராட்சிக்கு அரசு அறிவுரை
சொத்துவரி வசூலில் இனி கறார் காட்ட வேண்டாம்; தேர்தல் வருவதால் மாநகராட்சிக்கு அரசு அறிவுரை
ADDED : ஜூலை 23, 2025 07:37 AM

சென்னை: தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளதால், 'சொத்து வரி வசூலில் கறார் காட்ட வேண்டாம்; கொடுத்தால் பெற்றுக்கொள்ளுங்கள்' என, மக்களுக்கு அடுத்த சலுகை வழங்கும் வகையில், சென்னை மாநகராட்சிக்கு, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மக்களிடம் ஆளுங்கட்சி மீதான அதிருப்தியை சரிக்கட்டும் வகையில், பல கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில், மக்களிடம் பெயரை கெடுத்துக்கொண்ட ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் இருவரிடமிருந்து, கவுன்சிலர் பதவி பறிக்கப்பட்டது. மீதமுள்ள கவுன்சிலர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சாலையோர வாகன நிறுத்தங்களில், ஒப்பந்தம் முடிந்ததை காரணம் காட்டி, கட்டணம் வசூலிக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை கட்டணமின்றி நிறுத்திக் கொள்ளலாம் என, சலுகை தரப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக, சொத்து வரி வசூலில் அரசு சலுகை காட்ட துவங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் பிரதான வரி வருவாயில், சொத்து வரி, தொழில் வரி உள்ளது. இதில், ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் வரை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. கடந்தாண்டு சொத்து வரி வசூலிப்பில், மாநகராட்சி தீவிரம் காட்டியது. குறிப்பாக, சில ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த, 2 லட்சம் பேருக்கு சொத்து வரி செலுத்துவதற்கான, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
அதன் வாயிலாக, பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தவர்களும், சொத்து வரியை முன்வந்து செலுத்தினர். இதன் வாயிலாக, சென்னை மாநகராட்சி முதன் முறையாக, 2,025 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் என்ற புதிய இலக்கை அடைந்தது.
இந்தாண்டும் சொத்து வரி வசூலிப்பதில், மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், சட்டசபை தேர்தல் வருவதால், வரி வசூலிப்பில் கறார் காட்ட வேண்டாம் என, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தல் வர உள்ளதையொட்டி, சில நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக, 'குடியிருப்புகள், சொத்தின் உரிமையாளர்கள் சொத்து வரி கட்ட முன்வந்தால் வசூலித்து கொள்ளுங்கள். சொத்துவரி செலுத்தவில்லை என, கடந்தாண்டு போல், நோட்டீஸ் அனுப்பி, மக்களிடம் கறார் காட்ட வேண்டாம்' என, அறிவுறுத்தி உள்ளது.
அதே நேரம், தொழில் வரி, நிறுவன வரி உள்ளிட்ட வரி வகைகளை வழக்கம்போல் வசூலிக்கலாம்; அதற்கு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அதேபோல், சாலையோரங்களில் வாகன நிறுத்தங்கள் வாயிலாகவும் மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்து வந்தது. தற்போது, அதற்கான ஒப்பந்தமும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. அனைத்து சாலையோர வாகன நிறுத்தங்களிலும், வாகனங்களை கட்டணமின்றி நிறுத்தி கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மக்களுக்கு நேரடி வசூல் சார்ந்த இனங்களில், அரசு அடுத்தடுத்து சலுகை காட்டி வருகிறது. இந்த சலுகைகள், 2026 சட்டசபை தேர்தல் முடியும் வரை நீடிக்கும் என தெரிகிறது. அவ்வாறு நீடித்தால், இதற்காக அமைக்கப்பட்ட கட்டமைப்பு வீணாகும்.
எனவே, வருவாய் இழப்பை தவிர்க்கும் வகையில், வழக்கமான பணியை செய்ய, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். தேர்தல் காரணங்களை கூறி, கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்தினால், அதிகாரிகள் மீதான நன்மதிப்பும் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நான்கரை ஆண்டுக்குப்பின் போலீசார் திடீர் சுறுசுறுப்பு தி.மு.க., ஆட்சி அமைந்து நான்கரை ஆண்டுகளுக்குப்பின், சென்னையில் இரவு நேர குற்ற சம்பவங்கள் நடக்கவில்லை என்ற நிலையை உருவாக்கும்படி, ரோந்து போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ள உத்தரவு:
* இரவு நேர விபத்து நடக்காதவாறு, வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும். இரவு நேரங்களில், லேசர் விளக்குகளை யாரும் பயன்படுத்துகிறார்களா என, கண்காணிக்க வேண்டும்.
* போஸ்டர்கள் ஒட்டும் முன், ரோந்து போலீசார் தடுக்க வேண்டும். ஒட்டிய பின் தகவல் தரக்கூடாது. போஸ்டர்கள் ஒட்டப்பட்டால், இரவு நேர போலீசார் தான் பொறுப்பு.
* எந்த சாலையிலும், 'பைக் ரேஸ்' நடத்த கூடாது. பைக் ரேசில் ஈடுபடுவோர் தப்பிச் சென்றால், அவர்கள் செல்லும் வழியில் சோதனை செய்யும் போலீசாருக்கு தகவல் தர வேண்டும். அவர்களை பிடித்து, வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.
* போலீசார் 500 பேர் பாதுகாப்பில் இருக்கும்போது, பைக் ரேஸ் ஆசாமிகள் தப்பினர் எனக்கூறுவது இழுக்கு.
* இரவு 10:00 மணி முதல் 1:30 வரை சட்டம் - ஒழுங்கு பிரிவு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். மற்ற போலீசார் தொடர்ந்து குற்றங்களை தடுக்கும் விதமாக, வாகன சோதனையை தொடர வேண்டும். திருநங்கையரின் நகர்வுகளையும் கண்காணிக்க வேண்டும்.
* இரவு நேரங்களில், அவசர போலீஸ் உதவி எண், 100க்கு அழைப்புகள் வந்தால், போலீசார் கட்டாயம் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும். செல்லாமல் எதுவுமே நடக்கவில்லை என, மழுப்பலான பதில் கூறக்கூடாது.
* வங்கி ஏ.டி.எம்., மையங்கள், ஜுவல்லரி என, முக்கியமான இடங்களில் உள்ள பாதுகாவலர்கள், அதிகாலை 2:00 - 4:00 மணி வரை துாங்கிவிடுவர். அவர்களை நாம் எழுப்பி விட வேண்டும்.
* பூட்டப்பட்டுள்ள வீடுகளை கண்காணிக்க வேண்டும். ரோந்தின் போது கட்டாயம் சைரன் ஒலி எழுப்பியபடி செல்ல வேண்டும்.
* இரவில் எவ்வித குற்ற செயல்களும் நடக்கக்கூடாது. கத்திப்பாரா, அடையாறு, மடிப்பாக்கம், ஆலப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், இரவு நேரங்களில் குற்றங்கள் நடப்பதாக புகார் வருகின்றன
* செயின், மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் நடக்கலாம் என்பதால், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பூங்காக்கள், மைதானங்கள், மெரினா உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்
* ஓய்வு எடுத்த பிறகே இரவு பணி தரப்படுவதால், பணி நேரத்தில் ஓய்வு கூடாது; மொபைல் போனை பார்க்க கூடாது.
* இரவு நேரத்தில் எந்த காவல் நிலையத்திலும் குற்றவாளிகளை வைத்திருக்கக்கூடாது.
* வாகன தணிக்கையின் போது, போலீசாரிடம் தப்பிக்க, வாகனங்களில் வேகமாக செல்வோரை விரட்டிச் செல்லாமல், அடுத்த இடத்தில் வாகன தணிக்கை செய்யும் போலீசாருக்கு தகவல் தந்து பிடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க தடை விதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.