தேசிய நெடுஞ்சாலைகளில் இனி சூரியசக்தி விளக்குகள் ஒளிராது!
தேசிய நெடுஞ்சாலைகளில் இனி சூரியசக்தி விளக்குகள் ஒளிராது!
ADDED : செப் 23, 2024 02:01 AM

சென்னை: சூரியசக்தி மின்விளக்குகளால் கூடுதல் செலவு ஏற்படுவதால், தேசிய நெடுஞ்சாலைகளில் அவற்றின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வழிகாட்டுதலின்படி, சுங்கச்சாவடிகளின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா கழிப்பறைகள்; சாலை விபத்துகளை தவிர்க்க ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகள்.
அருகேயுள்ள மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள் மற்றும் போலீஸ் நிலையங்கள் உள்ளிட்ட விபரங்கள், இரவில் ஒளிரும் பலகைகளாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த எச்சரிக்கை பலகைகள் இரவில் தெரியும் வகையில், மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மின்கட்டணத்தை குறைப்பதற்காக, மாநிலம் முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், 2020 முதல் சூரியசக்தி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வந்தன.
தற்போது, சூரிய சக்தி மின்விளக்குகளை பொருத்தவும், பராமரிக்கவும் கூடுதல் செலவு ஏற்படுவதால், அவற்றின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் ஒருவர் கூறியதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சூரியசக்தி மின்விளக்குகள், தேசிய நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்பட்டன.
இவற்றை, எட்டு மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அவற்றின் ஆயுட்காலமும் குறைவு. முதலில் பிரகாசமாக எரியும் விளக்குகள், நாளாக நாளாக மங்க துவங்கி விடுகின்றன.
இதனால், வாகனங்களுக்கு போதிய வெளிச்சம் கிடைப்பதில்லை. இது, விபத்து ஏற்பட வழிவகை செய்கிறது. எனவே, பழையபடி மின்விளக்கு பொருத்தும் பணி நடக்கிறது.
சென்னை பைபாஸ் சாலையில், சூரியசக்தி மின்விளக்கு பொருத்தும் திட்டத்தை மாற்றி விட்டு, 20 கோடி ரூபாய் செலவில் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சூரியசக்தி மின்விளக்குகள் இனி நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.