ADDED : ஏப் 18, 2025 09:56 PM
சென்னை:உலகம் முழுதும், 2019 இறுதியில் பரவ துவங்கிய கொரோனா பெருந்தொற்றால், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு செல்வோருக்கு, கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. இப்போது, அந்த நிலைமை இல்லை.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படாததால், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல விரும்புவோர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
கொரோனா பாதிப்பு, உலகளவில் கட்டுப்படுத்தப்பட்ட தொற்றாக இருக்கிறது. இதனால், பெரிதாக எந்த நாடும், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கேட்பதில்லை. இந்தியாவில் கொரோனா தடுப்பூசியும் தற்போது செலுத்தப்படுவதில்லை.
அதேநேரம், கொரோனா பாதிப்பின் போது, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றிதழை வேண்டுமென்றால், எப்போது வேண்டுமானாலும், மத்திய அரசின், 'கோவின்' செயலியில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.