சட்ட விதிகள் தளர்வு காரணமாக உயிலை மெய்ப்பிக்க தேவையில்லை: பதிவுத்துறை தகவல்
சட்ட விதிகள் தளர்வு காரணமாக உயிலை மெய்ப்பிக்க தேவையில்லை: பதிவுத்துறை தகவல்
ADDED : மார் 11, 2026 04:36 AM

சென்னை : 'வாரிசுரிமை சட்டத்தில் சில பிரிவுகள் திருத்தப்பட்டதால், உயர் மதிப்பு சொத்துக்கள் சம்பந்தப்பட்ட உயில்களை, நீதிமன்றத்தில் மெய்ப்பிக்க வேண் டாம்' என, பதிவுத் துறை தெரிவித்துள்ளது .
சொத்து வைத்துள்ள நபர்கள், தங்கள் காலத்துக்குப் பின், அது யாருக்கு சென்று சேர வேண்டும் என்பதை உறுதி செய்ய, உயில் எழுதுவது வழக்கம். இவ்வாறு உயில் எழுதி, அதை சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட உயிலை, அதை எழுதியவர் இறந்த பின், சட்ட ரீதியாக அமல்படுத்த வேண்டும். இதில், சென்னை போன்ற பெருநகரங்களில் சொத்துக்களின் மதிப்பு அதிகம்.
எனவே, உயர் மதிப்பு சம்பந்தப்பட்ட உயில்களை சாதாரண முறையில் அமல்படுத்தாமல், அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, சாட்சியங்களுடன் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, இறந்தவரின் உயிலை அவரது வாரிசுகள் சாட்சிகளுடன் தாக்கல் செய்து உறுதிப்படுத்துவதை, 'புரபேட்' செய்தல், அதாவது மெய்ப்பித்தல் என்று கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட, 1925ம் ஆண்டு இந்திய வாரிசுரிமை சட்டத்தில், 213வது பிரிவில், இதற்கான விதிகள் வலியுறுத்தப்படுகின்றன. இவ்வாறு மெய்ப்பித்தல் செய்த உயிலின் அடிப்படையில் மட்டுமே, சம்பந்தப்பட்ட சொத்துக்களை வாரிசுகள் பயன்படுத்த முடியும்.
இந்நிலையில், தற்போதைய நடைமுறைக்கு இந்த விதிமுறை உகந்ததாக இல்லை என்று கூறப்பட்டது. இதன்படி, மத்திய அரசு, இது தொடர்பான விதிகளை நீக்கி உ ள்ளது.
இது தொடர்பாக, பதிவுத் துறை பிறப்பித்துள்ள சுற்றறிக்கை:
வாரிசுரிமை சட்டத்தில் உயிலின் உண்மைத்தன்மையை மெய்ப்பிப்பதை கட்டாயப்படுத்தும் விதிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவை தவிர்த்து, வாரிசுரிமை சட்டப்படி உயில்கள் தொடர்பான பத்திரங்களில், சார் - பதிவாளர்கள் முடிவு செய்யலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

