தரிசு நிலங்களை வகை மாற்ற 30 நாளில் தடையில்லா சான்று; விதிகளை திருத்தியது தமிழக அரசு
தரிசு நிலங்களை வகை மாற்ற 30 நாளில் தடையில்லா சான்று; விதிகளை திருத்தியது தமிழக அரசு
ADDED : ஏப் 14, 2025 06:15 AM

சென்னை : விவசாய செய்யாமல் தரிசாக உள்ள நிலங்களை வேறு பயன்பாட்டுக்காக, வகைபாடு மாற்றம் செய்வதற்கான தடையில்லா சான்றிதழை, 30 நாட்களுக்குள் வழங்கும் வகையில் விதிகளை திருத்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விவசாய நிலங்களை, அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்ற, உயர் நீதிமன்றம் 2016ல் தடை விதித்தது. இதையடுத்து, அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் விற்பனையை பதிவு செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற கெடுபிடி காரணமாக, விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கு, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்தது. புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய அரசாணை, 2017ல் வெளியானது.
இந்த விதிகளின்படி, விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றும் போது, நஞ்சை நிலங்களுக்கு, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டால், அதன்மீது முடிவு எடுக்கும் முன், வேளாண் துறை இயக்குநர், மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். இதில், தரிசு நிலங்களை பொறுத்தவரை, அந்தந்த மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர்களிடம் இருந்து தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்று மட்டுமே விதிகள் வகுக்கப்பட்டன. இதற்கு, அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்நிலையில், விவசாயம் செய்யாமல் தரிசாக உள்ள நிலங்களை, வேறு பயன்பாட்டுக்கு மாற்ற கோரும் விண்ணப்பம், 'ஆன்லைன்' முறையில் வந்தால், அதற்கு, 30 நாட்களுக்குள், இணை இயக்கு நர் தடையின்மை சான்றிதழ் அளிக்க வேண்டும். இந்த காலக்கெடுவை கடந்தால், தானியங்கி முறையில் தடையின்மை சான்றிதழ் உருவாகி விடும் என்று விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
மேலும், நில வகைப்பாடு மாற்றம் கட்டணமாக, அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பில், 3 சதவீத தொகையை வசூலிக்கலாம். திருப்பி தரக்கூடிய ஆவண சரிபார்ப்பு கட்டணமாக, ஒரு மனைக்கு, 1,000 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கலாம். தொழில் பூங்கா திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, இந்த வகைப்பாடு மாற்ற கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், விவசாயம் செய்யாமல் தரிசாக உள்ள நிலங்களை, வேறு பயன்பாட்டுக்கு மாற்றும் பணிகள், இனி விரைவாக மேற்கொள்ளப்படும். இது, கட்டுமான திட்ட அனுமதி பணிகளில் ஏற்படும் தாமதத்தை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

