பிராமண சமூகத்தை இனி எவரும் இழிவுபடுத்த முடியாது; சென்னை ஆர்ப்பாட்டத்தில் வேலுார் இப்ராகிம் எச்சரிக்கை
பிராமண சமூகத்தை இனி எவரும் இழிவுபடுத்த முடியாது; சென்னை ஆர்ப்பாட்டத்தில் வேலுார் இப்ராகிம் எச்சரிக்கை
UPDATED : நவ 04, 2024 09:25 AM
ADDED : நவ 03, 2024 08:27 PM

சென்னை:''எங்களை இனி ஒருவரும் இழித்துப்பேச முடியாது என்ற எச்சரிக்கையை தமிழக அரசுக்கும், தி.மு.க.,வினருக்கும் இந்த மாபெரும் கூட்டம் மூலம் பிராமணர் சமூகம் காட்டிக் கொண்டிருக்கிறது,'' என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராகிம் பேசினார்.
பிராமண சமூகத்தை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பி.சி.ஆர்., போன்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் இன்று இந்து மக்கள் கட்சி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராகிம் பேசியதாவது:
கடந்த ஒரு மாதம் முன், ஒரு மேடையில் ஒரு பெண் பிராமண சமூகத்தை இழிவுபடுத்தியபோது, 'அதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்' என்று அதே இடத்தில் தன் எதிர்ப்பை பதிவு செய்தவர் அர்ஜூன் சம்பத்.
அவரது வீரம், துணிவு, எதிர்ப்பாற்றல் தான் தமிழகத்தில் பிராமண சமூகத்தை இன்று மீண்டும் ஒரு முறை ஒன்று சேர்த்திருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் நடந்தும், பிராமண சமூகம் அமைதியாக இருந்தது எனக்கு வருத்தமாக இருந்தது.
'பிராமணர் என்றால், சாம்பார் சாதம், தயிர் சாதம் சாப்பிடுவோர்' என்றும், 'போகிற போக்கில் பூணுால் அறுக்க முடியும்' என்றும் கயவர்கள் கூட்டம் கொட்டம் அடிக்கும்போது மவுனம் காக்கிறீர்களே, எனக்கு வேதனையாக இருக்கிறது.
சுப்பிரமணிய பாரதியின் வாரிசு அல்லவா நீங்கள்? சுப்பிரமணிய சிவா வாரிசு அல்லவா நீங்கள்? உ.வே.சாமிநாத அய்யரின் வாரிசு அல்லவா நீங்கள்? இந்த தேசத்துக்கு உயிர்கொடுத்துப் பாடுபட்ட தலைவர்களை கொண்ட வீரம் மிகுந்த சமூகம் அல்லவா நீங்கள்?
'தன் சமூகத்தை ஒருவர் இழிவுபடுத்தும்போது, இன்னொரு சமூகத்தவர் குரல் கொடுக்கிறார் என்கிறபோது, நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்களே' என்று பேசினேன். அதைக்கேட்டு நிறையப்பேர் என்னிடம் வேதனைப்பட்டார்கள்.
'என் பிராமண சமூகத்தை தட்டி எழுப்ப எந்த வார்த்தை பிரயோகத்தையும் பயன்படுத்த நான் தயாராக இருக்கிறேன்' என்றேன்.
அப்படிச் சொன்ன பிறகு தான் இப்போது மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. பிராமண சமூகத்தை இனி ஒருவன் இழிவுபடுத்தி பேச முடியாது என்ற எச்சரிக்கையை தமிழக அரசுக்கும், தி.மு.க.,வினருக்கும் இந்த கூட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது.
ஒரு சமூகத்தை புறக்கணிப்பது, அதன் மீது வெறுப்பை ஏற்படுத்துவது, அழிக்க நினைப்பது தான் பாசிசம். அதை திராவிட மாடல் செய்யுமானால், அது என் செருப்புக்கு சமம். இதை சொல்வதால் எனக்கு எந்த பயமும் கிடையாது.
ஒரு சமூகத்தின் மீது தேவையற்ற எண்ணங்களை இவர்கள் பரப்புகிறார்கள். பிராமண சமூகத்துக்காக நாங்கள் எதைச் செய்வதற்கும் தயாராக இருக்கிறோம். எங்கள் குரலை வலிமையாக பதிவு செய்வோம்.இவ்வாறு வேலுார் இப்ராகிம் பேசினார்.