ADDED : மார் 20, 2024 02:04 AM

கே.என்.ஸ்ரீதரன், பெங்களுரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கடந்த சில மாதங்களாக, தமிழகத்தில் தொலைக்காட்சி விவாதங்கள் அனைத்தும், லோக்சபா தேர்தல் தொடர்பாகவே நடைபெறுகின்றன.
'கூட்டணி அமைப்பதில் ஏன் தாமதம், எந்த கூட்டணி வலுவான கூட்டணி, யார் யாருடன் சேருவர்' என்று, உத்தேச விவாதங்களாகவே நடக்கின்றன.
இந்த ஊடகங்கள், தேர்தல் களத்துக்குச் சென்று, மக்களை சந்தித்து, அவர்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு, உண்மைகளை வெளியில் சொல்வதில்லை. குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் சாதகமாகச் செயல்படுகின்றன.
பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு, தமிழகம் முழுதும் அமோக வரவேற்பு இருந்ததை, நான் தமிழகம் வந்தபோது பார்த்தேன். ஆனால், தமிழக, 'டிவி'க்கள் அதை பெரும்பாலும் இருட்டடிப்பு செய்து விட்டதாகவே தோன்றுகிறது.
வட மாநில, 'டிவி'க்கள் அதை சிலாகித்துப் பேசியதையும் பார்த்தேன்.
தமிழகத்தில், பிரதமர் மோடியை கிட்டத்தட்ட ஒரு வில்லன் போல சித்தரிப்பதைப் பார்த்தால், பூனை தன் கண்ணைக் கட்டியபடி, உலகமே இருண்டது என்று சொல்வதைப் போல இருக்கிறது.
ஏனெனில், தமிழகத்தில் ஒரு பக்கம் மது பழக்கமும், போதை கலாசாரமும், இளைஞர் சமுதாயத்தை சீரழித்து கொண்டிருக்கின்றன; மறுபக்கம், பெண்களுக்கு பாதுகாப்பு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றியெல்லாம் யாரும் விவாதிக்கத் தயாராக இல்லையே?

